முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
Rangasamy 2024-04-19

புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி. 

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. புதுவை முதல்வர் ரங்கசாமி கோரிமேட்டில் அப்பா பைத்தியம் சாமி கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தார். 

அங்கிருந்து கார் மூலம் திலாசுப்பேட்டையில் உள்ள பழைய வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அதே தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு காலை 8.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். 

தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு முதல்வர் ரங்கசாமி சென்றார். வி.மணவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயம், தனது மனைவி வசந்தியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு சென்றார். 

அங்கு முதல்வர் ரங்கசாமியின்  வருகைக்காக காத்திருந்தனர். முதல்வர் ரங்கசாமி சிறிது நேரத்துக்குள் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பா பைத்தியம் சாமிக்கு ரங்கசாமி தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார். தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அவர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து பக்தர்களுக்கு ரங்கசாமி திருநீறு வழங்கினார். 

பின்னர் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், 

காலை 8.45 மணிக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர்  நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மடுகரை கம்பத்தம் வீதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன் வீராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து