முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் துறைக்கு ரூ. 45,661 கோடி நிதி: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
MRK-2-2025-03-15

Source: provided

சென்னை : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்,” என்று வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மூலம், வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் வழங்கப்படும், கடன் 2019-20-ல், 1.83 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2023-24ல் 3.58 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து வணிக வங்கிகள் வழங்கும் பயிர்க் கடனில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2025-26-ம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப் பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கிட 22.80 கோடி ரூபாய் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், இப்பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அறுவடைக் காலங்களில் வேளாண் விளைபொருட்களின் அதிக வரத்தால், ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் பொருளீட்டுக் கடன் வசதியானது உழவர் உற்பத்தி நிறுவனங்கள் விரிவுபடுத்தப்பட்டு, பத்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.

தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில் ரூ.17,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான விவசாயிகளின் குறுகியகாலக் கடன் தேவைகளுக்கு 2025-26 ஆம் ஆண்டில் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு மூலதனக் கடன் வழங்கப்படும்.

கடந்த 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாய பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு, மொத்த பயிர்க்கடன் தள்ளுபடியான 12,110 கோடியே 70 லட்சம் ரூபாயில், தற்போதுவரை, தள்ளுபடித் தொகையாக 10,336 கோடியே 40 லட்சம் ரூபாயும், தள்ளுபடித் தொகை மீதான வட்டியாக 90 லட்சம் ரூபாயும் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26 ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கென 1,477 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, மீன்வியாபாரம் போன்ற சுயதொழில்களை மேற்கொள்ள 10,000 மீனவர் மற்றும் மீனவ உழவர்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திடும்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியமாக வழங்கப்படும். 30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவு தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். உழவர் நல மையங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மானாவரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ரூ.2,000 மானியமாக வழங்கப்படும்.  தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக் கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. 2023 - 24ஆம் ஆண்டில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

"2021-24 வரை 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2 ஆம் இடத்தில் உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை 30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து