முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது: முதல்வர்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட், இந்திய ரயில்வே தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கவோ அல்லது ஏதாவது ஒரு இலக்கை அளிக்கவோ முயற்சிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஓரிருநாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்டுள்ள இந்த ரயில்வே பட்ஜெட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு சராசரியாக 25 சதவீதத்திற்கு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதேபோல பயணிகள் கட்டணத்தையும் அவர் உயர்த்தி உள்ளார். கிலோ மீட்டருக்கு 2 பைசாவிலிருந்து 30 பைசா அளவிற்கு இந்த உயர்வு உள்ளது. சரக்கு கட்டணம் அளவிற்கு பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டவில்லை என்று வாதம் முன் வைக்கப்பட்டாலும், விலை வாசி உயர்வால் ஏற்கனவே துன்பப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வரி உயர்வு பெரும் சுமையாக அமையும். கட்டண விதத்தை நேர் செய்வதற்காக 5 ரூபாயாக உயர்த்தப்படுவதும் கண்டிக்கத்தக்கதாகும். பிளாட்பாரம் டிக்கட்கூட ரூ.5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நிபுணர்கள் அடங்கிய சுயேட்சையான ரயில்வே கட்டண ஒழுங்கு முறை ஆணையத்தை அமைப்பது என்ற அரசின் முடிவானது வருங்காலத்தில் ரயில்வே பட்ஜெட் அனைத்திலும் கட்டண உயர்வுகளை அதிகப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. 

பொதுவாக கடந்த பல ஆண்டுகளாக ரயில்வேயின் உபரி வருவாய் வீணாக்கப்பட்டு வருகின்றன. அணில் ககோகட்கர் குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில் ரயில்வேயின் நிதி நிலைமை சீர்கெட்டு இருப்பதாக கூறி, அதை தீர்க்க சில பரிந்துரைகளை அது அளித்துள்ளது. ரயில்வே பாதுகாப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவை என்று கூறியுள்ளது. ரயில்வே அமைச்சர் ரயில்வே பாதுகாப்பு சரியாக இல்லை கூறியுள்ளபோதிலும், அந்த பாதுகாப்பை எப்படி உருவாக்குவது, எப்படி செயல்படுத்துவது என்பதில் அக்கறை செலுத்தவில்லை. அதற்காகன முதலீடுகளையும் அவர் ஒழுங்கு படுத்தவில்லை. பொதுத்துறை, தனியார்துறை ஆகியவற்றுடன் கூட்டுச்சேர்ந்து ரயில்வேயை நவீனமயப்படுத்துதல் திட்டமானது சந்தேகத்திற்கு உரியதாகவே அமைந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து பேசப்பட்டபோதிலும், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை. 

இதேபோல, ஆளில்லாத லெவல் கிராசிங்ற்கு பதிலாக மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்களை கட்டுவது ஆகியவை குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரயில்வே அமைச்சகம் இதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் இப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதேபோலதான், ரயில்வே சிக்னல் முறைகளிலும் நிதி வசதி இல்லாததால் மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. 

தொழில் துறையில் மிகவும் முன்னேவரும் தமிழகத்தில் தொழிற்சாலைகளை வளர்ப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், இதற்கு புதிய ரயில்வே பாதைகள், புதிய ரயில்கள் போன்றவை அவசியமானதாகும். மாநிலத்திற்கு உள்ளும், வெளியிலும் தொழிலகங்களை இணைக்ககூடிய வகையில் 16 புதிய ரயில்கள் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான முறையீடும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் 10 புதிய ரயில்கள்தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அவை கூட தமிழகம் கேட்டதில்லை. இதன் மூலம் தமிழக மக்களும், தமிழகமும் கேட்ட குறிப்பிட்ட புதிய ரயில்களை விடக்கூட அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன.  இதேபோல புதிய ரயில் பாதைகள் சீரமைக்கும் விஷயத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 6 புதிய ரயில் தடங்களையும், விழுப்புரம் காட்பாடிக்கு இடையிலான ரயில்பாதை மின்மயமாக்குதல் போன்றவைகளும் ஏற்கப்படவில்லை. மும்பைக்கு 75 புதிய புறநகர் சேவை ரயில்களும், 44 கூடுதல் சேவைகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

கொல்கத்தாவிற்கு 50 புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னைக்கோ, தேவைகள் அதிகம் இருப்பினும், 18 கூடுதல் சேவைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையாக, தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஒரகடத்தை, ஆவடியுடன் இணைக்கும் புதிய ரயில் பாதை திட்டம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இதேபோல விழுப்புரம்-திருச்சிக்கு இடையே இரட்டை வழிபாதை அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை. போதிய நிதி நிலைமை இல்லாததால் 487 திட்டங்கள் முழுமை அடைய முடியாமல் உள்ளது என்பதை ரயில்வே அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோலதான் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. அந்த திட்டங்களை விரைவாக்க போதிய நிதிஒதுக்கீடும் இல்லை. 

2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சென்னையில் சரக்கு தளம் அமைக்கும் திட்டம் குறித்த செயல்பாடும், பட்ஜெட்டில் இல்லை என்பதும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்தியாவின் சராசரி குடிமகனுக்கு ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. வாய்கிழிய பேசுவது போல திட்டவட்டமான செயல்திட்டம் உள்ள திட்டங்கள் எதுவும் இதில் இல்லை.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony