இந்திய அணிக்கு சச்சின்தோள் கொடுப்பார்: டிராவிட்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஆக. 23 - நியுசிலாந்து டெஸ்ட் தொடரில் வி.வி.எஸ். லட்சுமணும், நானும் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு சச்சின் தோள் கொடுப்பார் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி படுதோல்வி கண்டது. இதனிடையே மூத்த வீரர்களான ராகுல் டிராவிட், லட்சுமண் ஆகியோர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுடன் களம் காண்கிறது இந்திய அணி. மிஷல் ஆர்டரை பொறுத்தவரையில் சச்சினை நம்பியே உள்ளது இந்திய அணி. இது தொடர்பாக டிராவிட் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணிக்கு சச்சின் தோள் கொடுத்து வருகிறார். நியுசிலாந்து தொடரிலும் அது தொடரும் என்று நம்புகிறேன். இந்திய கிரிக்கெட்டில் லட்சுமண் மிக சிறந்த வீரர். அவருடன் விளையாடியதை கவுரவமாக கருதுகிறேன். களத்தில் மிக சிறந்த வீரரான லட்சுமண் மைதானத்துக்கு வெளியில் மிக சிறந்த மனிதர். லட்சுமண் அவருக்கென்று சில உத்திகளை வைத்திருந்தார். அதன்படியே அவர் பயிற்சி மேற்கொண்டார். அணியில் இருந்த இளம் வீரர்களுக்கு அவர் மிகப் பெரிய ஊக்கமாக இருந்தார். அதனால் இளம் வீரர்கள் அவரை நன்றாக கவனித்திருப்பார்கள். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பார்கள். எனவே இளம் வீரர்களில் சிலர் லட்சுமணுக்கு நிகராக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: