கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை சோதனையில் 6 பேர் கைது!

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.18 - நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் 10 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி 6 பேரை கைது செய்துள்ளனர். 3 புக்கிகள் தலைமறைவாகிவிட்டனர்.

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் புக்கிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடெங்கும் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து முக்கிய நகரங்களில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. ஸ்ரீசாந்த், கைது தகவல் பரபரப்பாக வெளியானதால் பல நகரங்களில் சூதாட்டக்காரர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுவரை நடந்துள்ள விசாரணைகளில் இந்தியா முழுவதும் கிரிக்கெட் சுதைாட்டம் பெரிய அளவில் நடப்பது தெரிய வந்துள்ளது. அந்த சூதாட்டக்காரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னையிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் ஜரூராக நடப்பது தெரிய வந்தது.   சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்ற இடங்கள் குறித்து டெல்லி போலீசார் தகவல் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். 

கூடுதல் டிஜிபி நரேந்திர பால்சிங் உத்தரவின்பேரில், ஐ.ஜி.மஞ்சுநாத் மேற்பார்வையில் எஸ்.பி.பெருமாள் தலைமையில், எஸ்.பி.ராஜேஸ்வரி உள்ளிட்ட தனிப்படை போலீசார் சூதாட்டம் குறித்து தீவிரமாக  விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சென்னையில் நேற்று முன்தினம்  இரவு பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னையில் 8 பேர் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தை ஓசையின்றி நடத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. சைதாப்பேட்டை, அயனாவரம், மற்றும் வட சென்னைபகுதிகளில் அவர்கள் தனி அறைகள் ஏற்படுத்தி செயல்படுவதையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிந்தனர். சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் , வடசென்னை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.15 லட்சம் சிக்கியுள்ளது. மேலும் 10 லேப்டாப், 4 கம்ப்யூட்டர், 5 ஒயர்லெஸ் கருவிகளும், 24 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 6 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். கைதான 7 சூதாட்டக்காரர்களில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கைதான வேதாச்சலம் (வயது 62) என்பவர் முக்கியமானவர் ஆவார். இவர் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்துக்காகவே தனி ஆபீஸ் வைத்திருந்தார். அந்த அலுவலலகத்தில் போலீசார் சோதனையிட்டனர். அந்த அறை நவீன தொலை தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பந்தும் வீசப்படும் சமயத்தில் ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கு வசதியாக 2 கம்ப்யூட்டர்கள், 5 லேப் டாப்கள், 5 வயர்லஸ் போன்கள், மற்றும் ஆவணங்கள் அங்கு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பணம் கட்டியவர்கள் விபரம் அடங்கிய ஆவணங்கள் தனியாக இருந்தன. அங்கு சோதனையிட்ட போது கிரிக்கெட் சூதாட்டத்தில் திரட்டப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். 

கைதானவர்களில், புரசைவாக்கத்தை சேர்ந்த லக்கி என்ற நத்பத், செளகார்பேட்டையைச் சேர்ந்த நவீன்குமார் என்ற பாபு கவு தம், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகியோரும் அடங்குவர். கைதான 7 பேரில் 5 பேர் வடமாநிலத்தினர். இன்னும்  2 பேர் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களுார், ஐதராபாத் உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சூதாட்டக்காரர்களுக்கும் சென்னையில் பிடிபட்ட 5 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் தலைவனாக டெல்லியில் உள்ள சூதாட்டக்காரர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வழி காட்டுதலின் பேரில் சென்னையில் உள்ள 8 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களும் ஒரு வருடன் ஒருவர் ஒருங்கிணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சூதாட்டக் காரர்கள் 10 பேரும் பெரும்பாலும் வேதாச்சலத்தின் அலுவலகத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். மற்ற நேரங்களில் அவர்கள் அண்ணா சாலையில் உள்ள காப்பி ஷாப்பில் சந்தித்து பேசி முடிவுகள் எடுப்பதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சூதாட்டம் மூலம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை சம்பாதித்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். சென்னையில் அடையாளம் காணப்பட்ட 10 சூதாட்டக்காரர்களில் 7 பேர் பிடிபட்ட நிலையில் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அந்த 3 பேரில் ஒருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். மற்றொருவர் அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் ஆவார். இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் கட்டு பவர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலித்தது தெரிய வந்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் பணம் கட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் வட சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் தொழில் செய்து வருபவர்கள். இவர்கள் ஐ.பி.எல். ஆட்டத்தில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுவதோடு வழக்கமாகவே இந்தியா விளையாடும் போட்டிகளில் வெற்றி - தோல்வி பற்றி சூதாட்டத்தில் ஈடுபடுவது உண்டு என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியுள்ளது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிய வந்ததும் சென்னையில் 7 இடங்களில் நாங்கள் சோதனை நடத்தினோம். அப்போது 6 பேர் பிடிபட்டனர். அவர்களில் ஒருவரிடம் ரூ.10 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் விருத்தாசலம் என்ற வேதாசலம் உட்பட 5 புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதர 3 பேர் தப்பி தலைமறைவாகிவிட்டனர். இவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார். விருத்தாசலத்தின் மேற்கு ஜோன்ஸ் சாலை அலுவலகம்தான் பெட்டிங்கில் ஈடுபட்டோர் சந்திக்கும் இடமாக இருந்திருக்கிறது. இதேபோல் அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல காபி ஷாப்பும் பெட்டிங்கில் ்டுபடுவோர் கூடும் இடமாக இருந்திருக்கிறது.

தப்பி ஓடி தலைமறைவானவர்களில் பிரசாந்த் என்பவரை முக்கிய புக்கியாக போலீசார் கருதுகின்றனர். அவரது அயனாவரம் தர்ஷன் ரெசிடென்ஸியிலும் போலீசார் சோதனை நடத்தி இருக்கின்றனர். இவர்தான் அண்ணாசாலை காபி ஷாப்பை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்  சென்னையில் தொடர்ந்தும் பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

சூதாட்டத்துக்காக அவர்கள் பயன்படுத்திய போன்கள், லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 5 பேரிடமும் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று காலையிலும் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததும் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு ஐ.ஜி. மஞ்சுநாதா கூறினார்.

 சென்னையில் கைதாகி உள்ள 6 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்பு ஏதேனும் இருந்ததா என்று தெரிய வில்லை. இதை உறுதிபடுத்த 8 சூதாட்டக்காரர்களின் செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர  கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் பண பரிமாற்றமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இது தொடர்பான விசாரணைகள் முடிய சுமார் ஒரு மாதம் ஆகும் என்று சி.பி.சி.ஐ.டி,. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனஅதன் மூலமே இவர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது தெரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: