பி.சி.சி.ஐ. தலைவரின் மருமகன் வீட்டில் சோதனை

வியாழக்கிழமை, 23 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 24 - ஐ.பி.எல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆகியோரது சென்னை வீடுகளில் மும்பை போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடப்பு ஐ.பி.எல். 6 வது தொடர் முடிவடைய உள்ள நிலையில் பிக்சிங் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். சென்னை, கோயம்புத்தூர், மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் பல நகரங்களில் பிக்சிங் தரகர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் புக்கி ரமேஷ் வியாஸ் கொடுத்த தகவலின் நடிகர் விண்டு சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பிக்சிங்கில் ்ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அவரது செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்த போது சென்னை தொலைபேசி எண்ணுக்கு அதிக முறை அவர் பேசியிருப்பதும் தெரியவநதது. 

அந்த செல்போன் எண்ணை தேடிய போது மும்பை போலீசாருக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது. ஏனெனில் அந்த எண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மருமகனும், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியுமான குருநாத் மெய்யப்பனின் எண் என்பதுதான்! குருநாத் மெய்யப்பனுடன் பேசியவுடனேயே பிக்ஸிங் தரகர்களிடம் விண்டு பேசியதும் தெரியவந்தது. இதனால் குருநாத் மெய்யப்பனுக்கும் பிக்ஸிங்கில் தொடர்பு இருக்கலாமோ என்ற பலத்த சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. 

இதனால் விசாரணை வளையத்திற்குள் குருநாத் மெய்யப்பன் கொண்டுவரப்பட்டார். அதனால் அவரிடம் எந்த நேரத்திலும் மும்பை போலீசார் விசாரணை நடத்தி கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மும்பை போலீசார் மூவர் சென்னைக்கு வந்தனர். சென்னை வந்த மும்பை போலீசார் மூவரும் சென்னை போட் கிளப்பில் உள்ள சீனிவாசனின் வீட்டில் காலை 10 மணி முதல் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சர்ச்சைக்குரிய அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பாக சீனிவாசன் மற்றும் அவரது மருமகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: