முக்கிய செய்திகள்

இந்தாண்டு பாகிஸ்தானுக்கு ஒபாமா செல்லமாட்டார்

திங்கட்கிழமை, 9 மே 2011      உலகம்
Obama1 1

 

வாஷிங்டன்,மே.10 - அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா இந்தாண்டு பாகிஸ்தான் பயணத்தை மேற்கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். அப்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் என்று அறிவித்தார். 

அதேசமயத்தில் இந்தியாவுடன் வைத்திருப்பதைவிட நெருக்கமான உறவு கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தாண்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லவிருந்ததாக தெரிகிறது. 

இந்தநிலையில் அமெரிக்காவின் பரம எதிரி மட்டுமல்லாது சர்வதேச தீவிரவாதியுமான பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றுவிட்டன. இதனால் பாகிஸ்தான்-அமெரிக்கா இடையே ராஜதந்திர ரீதியான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்குள் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, பிரதமர் கிலானி மற்றும் ஒபாமா ஆகியோர்களை படுகொலை செய்வோம் என்று அல்கொய்தா தீவிரவாத இயக்கம் சபதம் எடுத்துள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு அதிபர் ஒபாமா செல்வது உகந்தது அல்ல என்று அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது. பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதால் இருநாடுகளிடையே ராஜதந்திர ரீதியாக உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தாண்டு பாகிஸ்தானுக்கு அதிபர் ஒபாமா செல்லமாட்டார் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோம் டோனிலோன் என்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அதிபர் ஒபாமாவின் பயண திட்டத்தில் பாகிஸ்தான் இடம் பெறவில்லை என்றும் டோனியன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: