முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க் குற்ற குறும்படம் குறித்து இலங்கை அரசு கருத்து

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூன் 16 - இலங்கை போர் குற்றம் குறித்து பிரிட்டீஷ் தொலைக் காட்சியான சேனல் 4 தயாரித்துள்ள குறும்பட காட்சிகளை தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உள்நாட்டு போரின்போது பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை என்பதையே இலங்கை அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

கடந்த 2009 ம் ஆண்டு இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதிக் கட்ட போர் நடந்தது. இந்த போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக பல்வேறு சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த ஆய்வுக் குழு இலங்கை இறுதிப் போரின்போது ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது. எனவே இலங்கை அரசு மீது சர்வதேச போர்க் குற்றத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தகுதி இருக்கிறது என்றும் அந்த குழு கூறியுள்ளது. 

இந்த நிலையில் பிரிட்டீஷ் தொலைக்காட்சியான சேனல் 4 என்ற நிறுவனம் இலங்கை போர்க் குற்றம் குறித்து குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த குறும்படம் உலகம் முழுவதும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்திலும் இந்த குறும்படம் காட்டப்பட்டது. இந்த டாக்குமெண்டரி படம் நேற்று முன்தினம் லண்டன் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.  இதனால் இலங்கை அரசு இப்போது அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இதுகுறித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூதர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்த படத்தில் காணப்படும் வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையானவையா என்பது கண்டறியப்படவில்லை. இந்த படத்தில் உள்ள காட்சிகள் இலங்கையிலுள்ள மக்களிடையே பகைமையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.  மேலும் இறுதிப் போரின்போது தங்களது ராணுவம் அப்பாவி மக்கள் யாரையும் படுகொலை செய்யவில்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony