முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்குடன் சோனியா சந்தித்து ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 10 - மத்திய அமைச்சரவை அடுத்தவாரவாக்கில் மாற்றம் செய்யப்படும் என்று பேசப்படும் சூழ்நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி,மேற்குவங்க மாநில முதல்வராக ஆனதை அடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தனது பதவியை இழக்க நேர்ந்தது. அதேபோல் இந்த ஊழலில் தற்போது சிக்கி சி.பி.ஐ.யால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனும் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மத்திய அமைச்சரவையில் பல காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் முரளி தியோரா போன்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய மத்திய அமைச்சர்களை நியமிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அமைச்சரவை அடுத்தவாரம் துவக்கத்தில் மாற்றி அமைக்கப்படும் என தெரிகிறது. இந்தநிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகை ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது தெரிவித்தார். எனவே அடுத்தவாரம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் மத்திய அமைச்சரவையில் பல அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புக்களை வைத்திருக்கிறார்கள். மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தொலை தொடர்புத்துறையும் மனிதவள மேம்பாட்டுத்துறையும் உள்ளது. பவன் குமார் பன்சலிடம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பாராளுமன்ற விவகாரம் ஆகிய இரண்டு இலாகாக்கள் உள்ளன. எனவே இவர்களது சுமையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வருகிறது. எனவே அம்மாநிலத்தை சேர்ந்த சிலர், பதவி உயர்வு பெறுவார்கள் என்றும் தெரிகிறது. மேலும் செயல்படாத சில அமைச்சர்கள் சிலர் தூக்கி எறியப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் நேற்று சந்தித்து நடப்பு அரசியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவரிடம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருமா?தொடராதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முகர்ஜி கூட்டணி தொடரும். மேலும் அது வலுப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக ஆ.ராசா, தயாநிதிமாறனுக்கு பதிலாக வேறு சிலருக்கு தி.மு.க. அமைச்சர் பதவிகளை கேட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் வேறு சிலரை நியமிக்கும் விஷயத்தில் தி.மு.க.வுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும் கூறப்படுகிறது. கனிமொழி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்தே கருணாநிதி அப்செட்டாகி உள்ளார். டெல்லிக்கு சென்றாலும் கூட அவர் சோனியாவையோ இதர தலைவர்களையோ சந்திப்பதில்லை. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது என்று சொல்லப்படுகிறதே தவிர அந்த உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மத்திய அமைச்சரவை அடுத்தவாரம் மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது அப்போது தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்