முக்கிய செய்திகள்

சிறையில் உள்ள தி.மு.க.வினரிடம் மு.க.அழகிரி நேரில் சந்திப்பு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை ஜூலை-21 - நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை மாவட்ட தி.மு.க. வினரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சந்தித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வேங்கட சமுத்திரத்தை சேர்ந்த சிவனாண்டி என்பவருக்கு சொந்தமான 5.14 ஏக்கர் நிலத்தை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், திருமங்கலம் ஒன்றியத்தலைவர் கொடி.சந்திரசேகர், திருப்பபரங்குன்றம் நகர செயலாளர் கிருஷ்ணபாண்டியன் உள்பட 8பேர் கொண்ட கும்பல் ஒன்று மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டதாகவும் அந்த இடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ராகர்க்கிடம் புகார் மனுக்கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய எஸ்.பி.அஸ்ராகர்க் நிலமோசடி வழக்கில் தொடர்புடைய 4பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்பேரில் போலீசார் தளபதி, பொட்டு சுரேஷ், கொடி.சந்திரசேகர், கிருஷ்ணபாண்டியன் ஆகிய 4பேரையும் கைது செய்து நேற்று முன்தினம் இரவு மாஜிஸ்திரேட் முத்துக்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் 4பேரையும் வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 4பேரும் பலத்த பாதுகாப்புடன் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரையும் சந்திக்க மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று பாளை மத்திய சிறைக்கு வந்தார். பின்னர் 4பேரையும் சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது  சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4பேரும் எனதுநண்பர்கள். எனவே அவர்களை சந்திப்பதற்காக வந்தேன். அவர்கள் மீது பொய் வழக்குப்போடப்பட்டுள்ளது. வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: