முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சநீதிமன்ற ஆணைப்படி நடப்போம்: முதல்வர் பதில்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.9 - சமச்சீர் கல்வி விவகாரத்தில் மாற்று கருத்து கிடையாது. உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதன்படி இந்த மாநில அரசு நடக்கும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். தமிழக சட்ட பேரவையில் 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்று துவங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, 14 வது சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கையை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். வேளாண் துறையில் அடிமுதல் நுனி வரை ஆராய்ந்து நிலவளம், நீர்வளம், நதிநீர் என எல்லா அம்சங்களும் ஆராய்ந்து அளித்துள்ளீர்கள். 

நிதிநிலை அறிக்கை 99 பக்கம் உள்ளது. வொதுவாக 99 ஆண்டு குத்தகை என்பார்கள். பட்ஜெட்டில் கூறியுள்ள அம்சங்களை முறையாக செயல்படுத்தினால் 99 ஆண்டுகள் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 2 அம்சங்களை முன்னுரிமையாக எடுத்துள்ளீர்கள். வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு உணவு திட்டங்கள், இரண்டு தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக கொண்ட திட்டங்கள். வரவு செலவு திட்டம் உண்மையான அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை படிக்கும்போது நடப்பது கனவா, நிஜமா என்று என் கையை நானே கிள்ளிப் பார்த்து கொண்டேன். அதையும் நம்பாமல் பக்கத்தில் உட்கார்ந்திருக்கின்ற உறுப்பினர் ஆறுமுகத்தின் கையையும் கிள்ளி பார்த்து கொண்டேன். தமிழக முதல்வருக்கு யார் செல்லப்பிள்ளை என்ற விவாதம் நடைபெறுகிறது. தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் கூறிய அம்சங்களை நிறைவேற்றினால் தமிழகத்தின் செல்லத் தாயாக நீங்கள் இருப்பீர்கவள் என்று உறுதியளிக்கிறேன்.    

சமச்சீர் கல்வியை  தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று அரசின் கொள்கையில்  மாறுபட்டகருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனாலும் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தி பாடத்திட்டங்களை எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். சமச்சீர் கல்வி என்பது பாடதிட்டத்தில் மட்டுமல்லாது வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், ஆசிரியர் விகிதாச்சாரம் போன்ற எல்லா நிலையிலும் சமநிலையை உருவாக்கிட வேண்டும்.  ஒரே பாடத்திட்டமாக இருந்தாலும் தராமான கல்வி தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது என்று பேசினார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு இந்த மாநில அரசுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மாற்று கருத்து கிடையாது. உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் ஆணையை எதிர்பார்த்து இருக்கிறோம். உச்சநீதிமன்றம் இன்றே கூட தனது ஆணையை வழங்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் ஆணை பெறப்பட்டவுடன் உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதன்படி இந்த மாநில அரசு நடக்கும் என்று பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்