முக்கிய செய்திகள்

இலங்கையின் செயலை கண்டிக்க தம்பிதுரை வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை,ஆக.19 - தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மதிப்பளித்து மத்திய அரசு இலங்கையின் செயலை கண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. குழு தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சே விமர்சனம் செய்துள்ளார். அரசியல் ஆதாயம் பெற இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், உண்மை நிலையை அறியாமல் முதல்வர் ஜெயலலிதா கருத்து கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கூற்று கடும் கண்டனத்துக்குரியது. அகில உலகமும் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை நன்கு அறியும். 30 ஆண்டு கால போராட்டத்துக்கு பின்பும் இலங்கையில் வாழும் தமிழர்கள் சட்டப்படி சிங்களர்களுக்கு இணையான உரிமையை பெறவில்லை. கடந்த 2009 ம் ஆண்டில் முடிவடைந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியது. அதை ஐ.நா. குழு உலகறிய செய்தது. 

எந்தவிதமான அரசியல் லாபம் பெறவும், இலங்கை தமிழர் பிரச்சினையை முதல்வர் ஜெயலிதா பயன்படுத்தவில்லை. இலங்கை தமிழ் மக்கள் அவர்கள் நாட்டிலேயே சம உரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதே முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பமாகும். 

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு இலங்கையின் பாதுகாப்பு செயலர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. மத்திய அரசானது உரிய நடவடிக்கை எடுத்து இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நியாயமான உரிமைகளை பெற உதவ வேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு முழுமையான மறுவாழ்வளிக்கும் வரை அவர்கள் சொந்த இடங்களில் மறு குடியமர்த்தப்படும் வரையில் ஓயப் போவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபட கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசானது ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு உரிய மரியாதையை கொடுத்து இலங்கையின் செயலை கண்டிக்க வேண்டும். இவ்வாறு அ.தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டாக்டர் தம்பிதுரை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: