முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் பணபலத்தை தடுக்க அமலாக்க அதிகாரிகளுக்கு தேர்தல்கமிஷன் உத்தரவு

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 7-  தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு  நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில்  பணபலத்தை தடுப்பதில் உஷாராக இருக்க வேண்டும் என்றும்  டி.ஆர்.ஐ. உள்ளிட்ட அமலாக்க பிரிவு முகமைகளுக்கு  தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு  வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களின்போது பண பலத்தை பிரயோகிக்க சில அரசியல் கட்சிகள் முயற்சி  செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.  இதை அடுத்த இந்த மாநிலங்களில் உள்ள அமலாக்க துறை முகமைகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன்  சில அறிவுரைகளை அளித்துள்ளது.

இந்த  தேர்தல்களின்போது உள் நாட்டிலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ பணபலம் விளையாடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்த 5 மாநிலங்களிலும் பண பலம் பிரயோகப்படுத்தப்படுவது குறித்து அமலாக்க துறை அதிகாரிகள் மிகுந்த உஷாருடன் இருக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தேர்தலின்போது பண பரிமாற்றங்களை தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.  குறிப்பாக தேர்தலின்போது அதிக அளவு பணத்தை எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும்  அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தலில் தூய்மையை பராமரிக்க குறிப்பாக வெளிப்படையை பராமரிக்க  வேட்பாளர்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரொக்க பண பரிமாற்றத்திற்கு இடம் கொடுக்க கூடாது என்றும்  தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. 

பண பலத்தால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு  தேர்தல் கமிஷனின் இந்த எச்சரிக்கை ஒரு  கடுமையான நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ஓட்டுக்காக பணம் கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்