கூடங்குளம்: எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்-சுப்பிரமணியசுவாமி

Image Unavailable

புது டெல்லி, நவ. -8 - கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்து இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் கடந்த பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சில வாரங்களுக்கு முன் சென்னையில் சந்தித்து பேசினார்கள். அதையடுத்து மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை, கூடங்குளத்தில் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் பிரதமரோ, நாட்டுக்கு அணு உலை மிக மிக அவசியம். எனவே இத்திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் கடிதம் எழுதினார். இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது. ஆனாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த நிலையில்தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அணு உலை இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதே என்றும், இந்த விஷயத்தில் மக்கள் போராடத் தேவையில்லை என்றும் பேட்டியளித்தார். மேலும் பயந்தால் வரலாறு படைக்க முடியாது என்றும் அப்துல் கலாம் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆதரவாக அப்துல் கலாம் மேற்கண்டவாறு தனது கருத்துக்களை கூறியுள்ளார். ஆனால் அப்துல் கலாமின் கருத்தையும் அப்பகுதி மக்கள் ஏற்பதாக இல்லை. அவர் ஒரு விஞ்ஞானி. அப்படித்தான் கூறுவார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் இந்த விஷயம் தொடர்பாக எந்த அமைப்பையும் சாராத நடுநிலையாளர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து சொன்னால் நாங்கள் போராட்டத்தை கைவிடத் தயார் என்கிறார் இந்த போராட்டக் குழுவை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர். இந்த நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்து இந்த போராட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து டெல்லியில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
இந்த நாட்டின் நலன்தான் மிகப் பெரிது. இந்த தேசத்தின் நலனை எந்த காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தேசவிரோத சக்திகளுக்காக நாம் எதையும் தியாகம் செய்து விடக் கூடாது. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது அரசியல் சட்ட கடமைகளை ஆற்ற வேண்டும். இந்த அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று சில தேச விரோத சக்திகள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிபணிந்து விடக் கூடாது. போராட்டம் நடத்துபவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்தில் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் குண்டர் சட்டத்தையோ, தேசிய பாதுகாப்பு சட்டத்தையோ அமல்படுத்தி அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். நாட்டு நலனுக்காக முதல்வர் இதை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த போராட்டங்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தனது அறிக்கை மூலம் முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ