அஜ்மல் கசாப்பை தூக்கில் போட வேண்டும்: பாக்., மந்திரி

Image Unavailable

 

அட்டூ(மாலத்தீவு), நவ.11 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் ஒரு பயங்கரவாதி. அவனை கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கே தெரிவித்து இருக்கிறார். அவனை கழுமரத்தில் ஏற்றியே தீர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதிலும் சரி, அவர்களுக்கு புகலிடம் அளிப்பதிலும் சரி, பாகிஸ்தானுக்கு நிகராக வேறு எந்த நாடும் இருக்க முடியாது என்பது பரவலான கருத்து. காரணம், அமெரிக்காவால் தேடப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் அங்குதான் ஒளிந்திருந்தான். அவனை தேடி கண்டுபிடித்து அவனுடைய சரித்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அமெரிக்கா. இதே போல் மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில்தான் ஒளிந்திருக்கிறான். இதை பாகிஸ்தான் இன்றும் மறுத்தாலும் கூட அதுதான் மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட பாகிஸ்தானே அஜ்மல் கசாப்பை தூக்கில் போட வேண்டும் என்று தற்போது கருத்து சொல்லியிருக்கிறது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதிரடியாக புகுந்து அங்குள்ள தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல் மற்றும் நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூரமான தாக்குதலில் அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட கிட்டத்தட்ட 168 பேர் அப்போது பலியானார்கள். இந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு கமாண்டோ படையினரும், பாதுகாப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று பயங்கரவாதிகளுடன் பயங்கர சண்டையில் ஈடுபட்டனர். இதில் 9 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். 

இவன் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. பிறகு நீதிமன்றம் இவனுக்கு தூக்குத் தண்டனை அளித்தது. ஆனாலும் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அஜ்மல் கசாப்பை தூக்கில் போடக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் கூட அவன் இன்னமும் தூக்கில் போடப்படவில்லை. இதே போல பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவையும் தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் மாலத்தீவில் நேற்று சார்க் நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியது. 

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் கலந்து கொண்டனர். இதே போல் சார்க் நாடுகளின் தலைவர்களும் அங்கு குவிந்துள்ளனர். சார்க் மாநாட்டையொட்டி அங்கு சென்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அங்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். முன்னதாக, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 

அஜ்மல் கசாப் ஒரு பயங்கரவாதி. அவனை கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும். அவனை கழுமரத்தில் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுக்கு நீதித்துறை கமிஷன் ஒன்று செல்லவிருக்கிறது. இது மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை துரிதமாக முடிக்க உதவும் என்றும் தெரிவித்தார். இந்த கமிஷன் இந்தியாவில் எத்தனை நாட்கள் தங்கும்? என்று கேட்ட போது, நீதித்துறை கமிஷனானது இந்தியாவில் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருக்கும் என்று தெரிவித்தார். எப்போது விசாரணை பூர்த்தியாகும் என்று கேட்ட போது, இப்போதுதான் நடைமுறை தொடங்கவிருக்கிறது. அதற்குள் எப்போது முடியும் என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று மாலிக் தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் ஒரு உறுதியான ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்றும் ரகுமான் மாலிக் தெரிவித்தார். மேலும் தனது நாட்டில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்தது தங்கள் நாட்டுக்கு தெரியாது என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் மழுப்பலாக தெரிவித்தார். இருப்பினும், ஒசாமா பின்லேடன் சி.ஐ.ஏ.,  ஐ.எஸ்.ஐ. போன்ற அமைப்புகளால் பயிற்சி பெற்றவன். அவனுக்கு எப்படி ஒளிவது என்று நன்றாகத் தெரியும் என்றும் மாலிக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்