பெட்ரோல்விலையை மீண்டும் உயர்த்த தயாராகும்எண்ணை நிறுவனங்கள்

Image Unavailable

புதுடெல்லி, நவ.- 12 - எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், டிசம்பர் மாதம் கச்சா எண்ணை வாங்க பணம் இல்லை என்று எண்ணை நிறுவனங்கள் புலம்ப ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் மீண்டும் ஒரு விலை உயர்வுக்கு இப்போதே எண்ணை நிறுவனங்கள் அடிப்போட்டுள்ளன.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு பல முறை பெட்ரோலிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தே விலகுவோம் என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்தன. இதையும் மீறி இந்த விலை உயர்வை நிறுத்த முடியாது என்று மன்மோகன் சிங் தெரிவித்துவிட்டார். இந்திய எண்ணை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.  இந்நிலையில் இந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. கடந்த காலாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் 7,486 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களை விலை குறைத்து விற்பதால் ஏற்பட்ட கடந்த 6 மாத இழப்பான ரூ.11,757 கோடியில் இதுவரை மத்திய அரசு எந்த இழப்பீட்டையும் அரசு தரவில்லை என்றும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதேபோன்றுதான் மற்ற மூன்று நிறுவனங்களும் உள்ளதாக தெரியவருகிறது. நஷ்டம் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று கச்சா எண்ணை இறக்குமதியை தொடர்ந்து வந்தன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வங்கிக் கடன் 73 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் விலைகளை உயர்த்த முடியாததாலும், கம்பெனியின் மோசமான நிதி நிலையை காரணம் காட்டியும் வங்கிகள் கடன் அளிக்க தயக்கம் காட்டி வருகின்றன. பணம் கிடைக்காததால் கச்சா எண்ணையை இறக்குமதி செய்ய இயலாது. இதனால்  நாட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது. அதனால் இந்த பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அரசு நிறுவனங்களுடன் போட்டிபோடும் தனியார் நிறுவனங்கள் இந்த துறையில் நல்ல லாபத்தை சம்பாதிக்கின்றன என்பது மட்டும் உண்மை.    
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ