இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பள்ளித்தோழியை மணந்தார்

Image Unavailable

 

சென்னை, நவ. 14 - இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தைச்சேர்ந்தவருமான ஆர்.அஸ்வினுக்கும், அவருடன் படித்த பள்ளித்தோழி ப்ரீத்திக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம் பெற்றார். தற்போது அவர் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்கிறார்.   ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் அவருக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. 25 வயதான அஸ்வின் டெல்லியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் முத்திரை பதித்தார். தனது அறிமுக டெஸ்டிலேயே அவர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

சென்னையை சேர்ந்த அஸ்வினுக்கும், அவருடன் பள்ளியில் படித்த தோழி ப்ரீத்திக்கும் கடந்த மே மாதம் ஐ.பி.எல். போட்டியின் போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அஸ்வின் -​பிரீத்தி திருமணம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. வைதீக முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என்.சீனிவாசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. 

இந்தியா -​வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2​வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (14​ந்தேதி) தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக திருமணம் முடிந்தவுடன் நேற்றே அஸ்வின் கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ