பாராளுமன்றத்தில் மீண்டும் சோனியா கலந்துகொண்டார்

Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 23 - பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமானது. இந்த கூட்டத் தொடரில் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவருமான சோனியாகாந்தி நேற்று கலந்துகொண்டார். லோக்சபையில் நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றார். 64 வயதான சோனியாகாந்திக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அவர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் அவருக்கு என்ன வியாதி இருந்தது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சிகிச்சை முடிந்து சோனியா காந்தி சில நாட்களிலேயே தாயகம் திரும்பினார். நேற்று தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அவர் கலந்துகொண்டார். கடந்த முறை மழைக்கால கூட்டத் தொடர் நடந்தபோது அந்த கூட்டத் தொடர் முழுவதுமே அவர் பங்கேற்கவில்லை. ஆனால் நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பிரகாசமான நீலநிற பட்டுச் சேலையை அவர் அணிந்திருந்தார். வழக்கம்போல் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் முன்வரிசையில் அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் இருந்தனர். அந்த வாழ்த்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார் சோனியா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ