முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் தேவ்ஆனந்த் லண்டனில் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

லண்டன், டிச. - 5 - ஜானி மேரா நாம், வாரண்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்து என்றும் இளைமையானவர் என்று இந்தி ரசிகர்களால் போற்றப்பட்ட பிரபல ரொமாண்டிக் சூப்பர் ஸ்டார் தேவ் ஆனந்த் நேற்று லண்டனில் தனது 88 வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.  வரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய சினிமாவின் ரொமாண்டிக் சூப்பர் ஸ்டார் என போற்றப்பட்ட நடிகர் பிரபல இந்தி நடிகரான தேவ் ஆனந்த். இவர் பேயிங் கெஸ்ட், பாஜி, ஜூவல் தீப், சி.ஐ.டி. ஜானி மேரா நாம், வாரண்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஷ் பார்தீஷ் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்து இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவிலான ரசிகர்களாலும் போற்றப்பட்டவர். என்றும் இளமையோடு இருப்பவர் என்ற பெயரையும் பெற்றவர். இவருக்கு வயது 88. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. மருத்துவ பரிசோதனைக்காக தேவ் ஆனந்த் லண்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமடைந்தது. நேற்று 88 வயதான தேவ் ஆனந்த், மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உயிர் பிரிந்த போது அவரது மகன் சுனில் உடனிருந்தார். 

1946 ம் ஆண்டில் ஹம் ஏக் ஹேன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் தேவ் ஆனந்த். 1947 ல் இவர் நடித்த ஜித்தி என்ற படம் வெளியானது. அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராகவே திகழ்ந்தவர் தேவ் ஆனந்த். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தேவ் ஆனந்த் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2001 ம் ஆண்டில் இவருக்கு கவுரவமிக்க பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 2002 ம் ஆண்டில் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது கிடைத்தது. 1949 ம் ஆண்டு இவர் படத் தயாரிப்பு கம்பெனியை உருவாக்கி 35 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார். 

ஆஸ்கார் விருதுக்கு இணையான பிலிம்பேர் விருதுகளையும் 2 முறை பெற்றுள்ளார். 1993 ல் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு பிலிம்பேர் மூலம் கிடைத்தது. 1996 ல் இவருக்கு மீண்டும் வாழ்நாள் சாதனையாளர் விருது வீடியோகான் மூலம் கிடைத்தது. மரணமடைந்த தேவ் ஆனந்துக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். ஒருவர் சேட்டன் ஆனந்த், மற்றொருவர் விஜய் ஆனந்த். இவர்களது சகோதரி ஷீல் காந்தா கபூர். தேவ் ஆனந்த் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

தேவ் ஆனந்த் ஒரு மிகப் பெரிய நடிகர். சினிமா பிரியர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர். நடிப்பிலும் சரி, தயாரிப்பிலும் சரி, ஒரு உருவகமாக திகழ்ந்தார். அவரது மறைவால் வாடும் அவரது ரசிகர்களோடு நானும் இணைந்து எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்தி திரையுலக பிரமுகர்களும் தேவ் ஆனந்த் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony