முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு நிதி உதவி நிறுத்தம் இல்லை: அமெரிக்கா

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச.15 - பாகிஸ்தானுக்கு நிதி உதவி நிறுத்தப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட பாகிஸ்தான் படைகள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த தீவிரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தானை கேட்காமலேயே தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கோபம் அடைந்துள்ளது.

தீவிரவாதிகள் மீது ஒழுங்காக நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் நிதி உதவியை குறைக்கப்போவதாக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து பாகிஸ்தானுக்கான நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்துகிறது என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் பாகிஸ்தானுக்கு சிவில் நிதி உதவிகளை  அமெரிக்கா நிறுத்தவில்லை என்றும் ராணுவ நிதி உதவிகளைத்தான் அமெரிக்கா நிறுத்தியுள்ளது என்று இப்போது அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் கூறுகையில் -  என்ன நடந்திருக்கிறது என்ன நடக்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் நிதி உதவியை நாங்கள் குறைக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவத்திற்கு அளித்து வரும் சில ராணுவ தளவாடங்களை குறைக்கத்தான் நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம். இது தொடர்பான தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றார்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு அளிக்கப்படும் வெடி குண்டு பொருட்கள் தீவிரவாதிகளுக்கும்  போய்ச்சேருகிறது என்ற அடிப்படையில் இந்த வெடிபொருட்களை பாகிஸ்தானுக்கு சப்ளை செய்வதை குறைக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றபடி பாகிஸ்தான் பொது மக்கள் பயன் பெறுவதற்கான நிதி உதவிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்று நுலண்ட் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony