முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.31 - தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணப்பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்செய்ய ரூ.150 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உயரதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் உட்பட பல்துறைச் செயலாளர் அனைவரும், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த 25.12.2011 அன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 27.12.2011 அன்று வலுவடைந்து புயலாக உருவெடுத்தது.  தானே என்று பெயரிடப்பட்ட அந்த புயலானது புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே நேற்று 30.12.2011 காலை  6.30 மணியளவில் கரையைக் கடந்தது. 

தானே புயல் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த உடனேயே, புயல் ஆபத்திலிருந்து காப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு நான் உத்தரவிட்டேன். எனது ஆணையின் பேரில், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டன. 

மேலும், 29.12.2011 அன்று தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.  காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

கடலோர மாவட்டங்களில் உள்ள  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.  125 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று  முன்தினம் இரவு முதல் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப் பணித் துறை உட்பட சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விழிப்புடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் தனிப்புப் படையை சார்ந்த 4 குழுக்கள்  கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன.  இதனைத் தொடர்ந்து, புயல் மற்றும் அதன் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்து நேற்று (30.12.2011) நான் ஆய்வு செய்தேன். 

இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், தீயணைப்புத் துறை இயக்குநர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை  செயலாளர்கள்  கலந்து கொண்டனர்.  புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.  இவற்றை சீராக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், போக்குவரத்திற்கு தடையாக விழுந்துள்ள  மரங்களை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்யவும், மின் கம்பங்களை சரிசெய்து மின் இணைப்பை இன்று மாலைக்குள் அளித்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.   உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகியவற்றிற்காக 150 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். 

மேலும், தானே புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேதங்களை மதிப்பீடு செய்து    அரசுக்கு அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட, திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பி.வி. ரமணாவையும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  டி.கே.எம். சின்னையாவையும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சி.வி. சண்முகத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு  கே.ஏ. ஜெயபாலுவையும், கடலூர் மாவட்டத்திற்கு எம்.சி. சம்பத்தையும் இன்றே செல்லும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்