முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்டூர்புர ரவுடி கொலை - ஆய்வாளர் சஸ்பெண்ட்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.25 - சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி காரில் வந்த கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். அவரை ஜாமீனில் விட்டால் கொல்லப்படலாம் என்று உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்தும் அலட்சியமாக இருந்த எம்.ஜி.ஆர். நகர் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் (35) கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 6​ந் தேதி ஜாமீனில் விடுதலையானார். நேற்று முன்தினம் மாலை அவர் நண்பர் ஆல்பர்ட்டுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் காரில் 10 பேர் கும்பல் துரத்தியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க கார்த்திக் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார். காரில் வந்த ரவுடி கும்பல் கோட்டூர்புரத்தில் அவரை மடக்கினார்கள். அங்கு கார்த்திக் நெரிசலில் சிக்கியதால் தப்பிக்க முடிய வில்லை. கோட்டூர்புரத்தில் நடு ரோட்டில் காரில் வந்த 10 பேர் கார்த்திக்கை வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் காரில் தப்பிச்சென்று விட்டனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோட்டூர்புரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ரவுடிகள் கோஷ்டி மோதலில் இந்த படுகொலை நடந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோதலை தடுக்க தவறியதாக எம்.ஜி.ஆர்.நகர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரவுடிகள் கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார்கள். அதில் ஒரு கோஷ்டியை சேர்ந்த முரளி என்பவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கார்த்திக் கைதானார். ஆனால் சமீபத்தில் அவர் ஜாமீன் பெற்று விடுதலையாகி விட்டார். இதை அறிந்த எதிர்க்கோஷ்டியினர் அவரை பழிவாங்க திட்டமிட்டு இருந்தனர். நேற்று அவரை துரத்திச்சென்று நடுரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு படுகொலை செய்து விட்டனர். கார்த்திக் விடுதலையானதும் எதிர்கோஷ்டியினரால் அவர் கொலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. அங்கு கோஷ்டி மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது என்று உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்து இருந்தனர். இதை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் ரவுடி கார்த்திகுக்கு கொலை வழக்கில் ஜாமீன் வழங்கினால் சட்டம்​ஒழுங்கு பிரச்சினை எற்படும் என்பதால் போலீசார் முன் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை. இதனால்தான் ஜாமீனில் வந்ததும் அவர் கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டது என்று உளவுப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டினர். இதையடுத்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் தென்சென்னை இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதுபோல் சட்டம்​ ஒழுங்கை காப்பாற்ற தவறும் போலீசார் மீது நடவடிக்கை தொடரும் என்று உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!