முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்க ரூ.152 கோடி

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.27 - தென்காசி, பவானி மற்றும் முதுகுளத்தூர் உட்பட 11 நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலைகளை அமைக்க ரூ. 152 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகவும், நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும் பாலமாகவும் சாலைக் கட்டமைப்பு விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளின் உறுதித் தன்மை அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக  விரைவிலேயே பழுதடைவதை களையும் விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்தினை சீரமைக்கும் விதத்திலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும்,  நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் வண்ணமும், 152  கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள, 6 கி.மீ நீளமுள்ள தென்காசி நகர் புறவழிச்சாலைக்கு 9 கோடியே 70 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், 6.89 கி.மீ. நீளமுள்ள சங்கரன் கோவில் நகர் புறவழிச்சாலைக்கு 17 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயும், 7 கி.மீ. நீளமுள்ள அம்பாசமுத்திரம் நகர் புறவழிச்சாலைக்கு 19 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 4 கி.மீ. நீளமுள்ள முதுகுளத்தூர் நகர் புறவழிச்சாலைக்கு 5 கோடியே 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும், 11 கி.மீ நீளமுள்ள பவானி நகர் புறவழிச்சாலைக்கு 5 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயும்,  22.66 கி.மீ. நீளமுள்ள நாமக்கல் நகர் புறவழிச்சாலைக்கு 7 கோடியே 78 லட்சத்து 33  ஆயிரம் ரூபாயும், 13.60 கி.மீ. நீளமுள்ள திருச்செங்கோடு நகர் புறவழிச்சாலைக்கு 4 கோடியே 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும், 19.50 கி.மீ. நீளமுள்ள கடலூர் நகர் புறவழிச்சாலைக்கு 27 கோடியே 72 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயும், 2.80 கி.மீ. நீளமுள்ள ஆற்காடு நகர் புறவழிச் சாலைக்கு 1 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயும், 11 கி.மீ நீளமுள்ள திருப்பத்தூர் நகர் புறவழிச்சாலைக்கு 6 கோடியே 19 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும்,  8.20 கி.மீ. நீளமுள்ள திருவண்ணாமலை நகர் புறவழிச்சாலைக்கு 6 கோடியே 23 லட்சம் ரூபாயும், பிற செலவினங்களுக்காக 41 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயும் என 11 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்காக 152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளினால்,  நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக குறைவதுடன், பயணிகளின் பயண நேரம் மற்றும் விபத்துகள் பெருமளவு குறையும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!