முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பனி சிகரத்தில் காஸ்ட்லியான ஹோட்டல்

கோடை வாசஸ்தலங்களில் விடுமுறைக்கு செல்பவர்கள் சற்று தள்ளி அமைந்திருக்கும் அமைதியான இடங்களை நாடுவது வழக்கம். ஆனால் ரொம்பவே தள்ளி, பனி சிகரத்தின் மலை உச்சியில் மிகவும் காஸ்ட்லியான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள தெனாலி தேசிய பூங்காவில்தான் அந்த ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு விமானத்தில் செல்வதை தவிர வேறு மார்க்கம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி அதாவது 1829 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. பருவ காலங்களில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை பார்ப்பதற்கே காண கண் கோடி வேண்டும். அதற்கு ஈடாக இந்த ஹோட்டலுக்கு செலவழிக்கவும் காசு கோடி வேண்டும். ஜோடியாக தங்குபவர்களுக்கு 3 இரவுகளுக்கு வெறும் ரூ.26 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பனி சறுக்கு, மலையேற்றம் போன்ற பல்வேறு பொழுது போக்கு  அம்சங்களும் பகலில் உள்ளன. இரவில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை காண்பதே இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பரவச அனுபவமாகும். 

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

த்ரெட்டிங் கவனம்

த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் அவ்விடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகள் மூடி பிம்பிள் வருவது தடுக்கப்படும். ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தலாம். இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் தடுக்கப்படும். த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணிநேரத்திற்கு அவ்விடத்தைத் தொடக்கூடாது.

தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்

1609 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் 'ஹான்ஸ் லிப்பர்ஷி' என்பவர் ஒரு மூக்கு கண்ணாடி கடை வைத்திருந்தார். அவரிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனுக்கு பொழுது போகவில்லை. எனவே அவன் மூக்கு கண்ணாடிக்கு பயன்படும் ஒவ்வொரு லென்சாக எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று குழி ஆடியை கண்ணுக்கு அருகிலும், குவி ஆடியை  சிறிது தொலைவிலும் பிடித்து கொண்டான். தூரத்தில் உள்ள சர்ச் கோபுரத்தை அந்த இரு கண்ணாடிகள் வழியாக பார்த்தான். அவன் கோபுரத்தை லென்ஸ் வழியாக பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அந்த கோபுரம் அவனுக்கு மிக அருகில் இருப்பது போல தெரிந்தது. இதை தனது முதலாளியான ஹான்ஸ் லிப்பர்ஷி வந்தவுடன் கூறினான். அவர் அதை ஒரு தகரக் குழாயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலியோ அங்கு வருகிறார். இந்த விவகாரம் விஞ்ஞானியான கலிலியோவுக்கு தெரிய வந்தது. உடனே கலிலியோ இது குறித்து தெரிந்து கொண்டு இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி கருவி ஒன்றை உருவாக்கினார். பின்னர் அதை சற்று மேம்படுத்தி, கொஞ்சம் வித்தியாசமாக, லென்ஸ்கள் முன்னும் பின்னும் நகரும் மாதிரியான குழாயில் அடைத்தார். அதற்கு "டெலஸ்கோப்" எனப் பெயரிட்டார். அதன் பிறகு வானியல் சரித்திரமே தலைகீழாக மாறிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.

முதன் முதலில் எடுத்த புகைப்படத்தை புரொசஸ் செய்ய எவ்வளவு நேரமானது தெரியுமா?

Nicéphore Niépce என்பவர் எடுத்த புகைப்படம் தான் உலகின் முதல் புகைப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவர் எடுத்து அதை புரொசஸ் செய்வதற்கு மட்டும் 8 மணி நேரம் பிடித்துள்ளது. அப்போதைய கையால் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள் காரணமாக இத்தனை மணி நேரமானது. மேலும் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கும் நீண்ட நேரமானது. எனவேதான் பண்டைய காலங்களில் புகைப்படத்துக்கு நீண்ட நேரம் போஸ் கொடுக்க வேண்டியிருந்ததால், பெரும்பாலும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் சிரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் அசையாமல் இருக்க வேண்டும் அல்லவா. அது சரி முதலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துக்கு என்ன டைட்டில் தெரியுமா  "லே கிராஸில் ஜன்னல் வழி தெரியும் காட்சி" என்பதாகும்.

அமெரிக்க பெண்களை அச்சுறுத்தும் இருதய நோய்

அமெரிக்கா்களிடம் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக புரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் எனப்படும் நோய் மாரடைப்பு நிகரானதாக மருத்துவ நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.  இது கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.அதிலும் இதனால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது கவலைக்குறிய அம்சமாகும். இந்த பாதிப்பானது 50 முதல் 74 வயதினரை தாக்கும் போது நிலைமை இன்னும் விபரீதமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பெருகி வரும் விவாகரத்துகள், வேலைப்பளு, மாறி வரும் சமூக சூழல் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம், சோரவு போன்றவையே இது ஏற்பட காரணம் என்கின்றனர்மருத்துவ வல்லுநர்கள். கடந்த 2006 லிருந்து 2017 வரை இருதய கோளாறு தொடர்பாக இந்த வயது பிரிவினர்கள் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர் என்கிறது அந்நாட்டு புள்ளிவிபரம். அதில் பெரும்பாலோனோர் 50 வயதை கடந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்