முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுந்தீவனங்களைசேமிக்கும் தொழில் நுட்பங்கள்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

உலக அரங்கில் நாம் பால் உற்பத்தியில் முதல் இடம் வகித்தாலும், கால்நடைகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்த உற்பத்தியானது மிகவும் குறைவேயாகும். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பசுந்தீவனப் பற்றாகுறை ஆகும். ஒரு பசுவின் வளமான வளர்ச்சிக்கு ஒருநாளைக்கு குறைந்தது 20 கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். ஆனால் இக்காலகட்டத்தில் நிலப்பற்றாகுறை மற்றும் பருவமழை பொய்ப்பு காரணமாக பசுந்தீவன உற்பத்தி ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. ஆகவே, பருவமழைக்காலங்களில் கிடைக்கும் கூடுதலான தீவனத்தை விரயப்படுத்தாமல் சேமித்து, தீவனம் குறைவாக கிடைக்கும் காலங்களில் பயன்படுத்துவதற்கு சிக்கனமான சிறந்த சேமித்து வைக்கும் முறைகளை அறிதல் அவசியம்.

பசுந்தீவனப் பயிர்களைசேமிப்பதற்கான தொழில் நுட்பங்கள் - பசுந்தீவனத்தை இரு வகைகளில் சேமித்துவைக்கலாம்.

1. பசுந்தீவனத்தை அதன் பசுமைமாறாமல் பதப்படுத்திகுழிகளில் சேமித்துவைக்கும் ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை

2. பசுந்தீவனத்தை அதன் சத்துக்கள் குறையாத வண்ணம் சரியான தருணத்தில் அறுவடை செய்து நிழலில் உலர்த்தி உலர் தீவனமாக்கி படப்புபோர் அமைத்து சேமித்தல்

அ. ஊறுகாய்ப்புல் தீவனம் (சைலேஜ்) தயாரித்தல்

பருவமழைக்காலங்களில் கிடைக்கும் கூடுதலான தீவனத்தை விரயப்படுத்தாமல் சேமித்து, தீவனம் குறைவாக கிடைக்கும் காலங்களில் பயன்படுத்துவதற்கு ஒரு சிக்கனமான சிறந்த வழி ஊறுகாய்ப்புல் தயாரிப்பதாகும். குறைந்த செலவில் குழிகள் எடுத்து, பசுந்தீவனத்தை பதப்படுத்தி சேமித்து ஊறுகாய்ப்புல் தயாரித்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

ஊறுகாய்ப்புல் தீவனம் (சைலேஜ்) தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

•தீவனப்பயிர்களின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மாறுவதில்லை. கால்நடைகளும் உறுகாய்ப்புல்லை; விரும்பி உண்ணும். எனவே பசும்புல் கிடைக்காத காலங்களில் ஊறுகாய் ;புல்லை மாடுகளுக்கு அளிக்கலாம்.

•கடினமான தண்டு மற்றும் முற்றிய புல்லைக்கூட ஊறுகாய்ப்புல்லாய் மாற்றுவதன் மூலம் அவை மென்மைப்படுத்தப்பட்டு கால்நடைகள் விரும்பி உண்ண ஏதுவாகும்.
•தீவனப்புல்லுடன் உள்ளகளைகள், விதைகள் இதன் மூலம் அழிக்கப்படுகிறது.

•ஊறுகாய்ப்புல்லை 9-12 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.

ஊறுகாய்ப்புல் தயாரிக்கஉகந்ததீவனப்பயிர்கள்

1.தீவனச்சோளம்

2.தீவனமக்காச்சோளம்

3.கம்புநேப்பியர் ஒட்டுப்புல்

நம் நாட்டில் அதிகஅளவில் பயிரிடப்படுவதால் சோளப்பயிர் கொண்டு ஊறுகாய்ப்புல் தயாரிப்பது பற்றி அறிவது நன்மை பயக்கும். ஊறுகாய் புல் உற்பத்திக்கு தீவனச்சோளம் எம்.பி.சாரி, தீவனச்சோளம் கோ-27, தீவனச்சோளம்கோ. எப்.எஸ்-29 போன்ற தீவனச்சோள இரகங்கள் ஏற்றவை.

ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் வழிமுறைகள்

1.தேர்ந்தெடுக்கப்பட்ட தீவனச்சோள இரகங்களை மானாவாரியாக, வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பயிரிடவேண்டும்.

2.தீவனச்சோளத்தின் கதிர்கள் பால்பருவத்தில் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.

3.அறுவடை செய்த தீவனச்சோளத்தை வயலிலேயே 1-2 மணி நேரம் உலரவிட வேண்டும்.

4.உலரவிடப்பட்ட தீவனத்தை சிறுசிறு கட்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 35 முதல் 40 சதவீதம் உலர் எடை இருத்தல் அவசியம்.

5.இந்த சிறுகட்டுகளை ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழிகளில் அடுக்கடுக்காக நிரப்ப வேண்டும்.

6.அடுக்கடுக்காக நிரப்பும் போது அடுக்குகளை நன்குமிதித்துவிடுவதன் மூலம் இடையிலுள்ள காற்றை வெளியேற்றுவது மிகவும் அவசியம்.

7.ஒருடன் தீவனப்பயிருக்கு 20 கிலோ மொலாசஸ், 8 கிலோ சாதாரண உப்பு தூவ வேண்டும். மொலாசஸ் கிடைக்கப் பெறாத விவசாயிகள் வெல்லப்பாகினைடன் ஒன்றுக்கு 20 கிலோ என்று பயன்படுத்தலாம்.

8.சைலேஜ் குழிகள் நிரம்பியவுடன் தரைமட்டத்திற்கு மேல் 1-2 அடிவரையில் தீவனச்சோளத்தை அடுக்கி அதன் மேல்புறத்தை தீவனச்சோளம் கொண்டே கூம்புவடிவில் அமைக்க வேண்டும்.

9.குழிகளில் கூம்பு அமைத்து, அதன் மேல் பாலிதின் தாள் அல்லது புல் கொண்டு மூடி அதன் மேல் மண் கொட்டி காற்றுப்புகாமல் அடைக்க வேண்டும்.

10.பொதுவாக ஊறுகாய்ப்புல்லை மழைக்காலங்களில் தயாரிக்கும் சூழல் இருப்பதால், மழைநீர் உட்புகாதவாறு மேலும் மண் கொட்டி விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

11.பதப்படுத்தப்பட்டஊறுகாய்ப்புல், மூன்று மாதங்களுக்கு பிறகு கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கும்.

இவ்வாறு பதப்படத்தப்பட்ட ஊறுகாய்ப்புல்லை கறவைமாடுகளுக்கும், செம்மறியாடுகளுக்கும், வெள்ளாடுகளுக்கும் கோடையில் உணவாக கொடுக்கலாம். இதனால்; கோடையில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையை பூர்த்திசெய்யலாம். கறவைமாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 - 25 கிலோ என்ற அளவில் அளிக்கலாம்.

தயாரிப்பிலுள்ள இடர்பாடுகள் அல்லது கருத்தில் கொள்ள வேண்டுபவை

•தகுந்தமுறையில் பதப்படுத்தப்படாவிட்டால், தீவனப்பயிர்கள் கெட்டுப்போகவும், சத்துக்கள் வீணாகவும் வழி ஏற்படும்.

•ஒரு முறை சைலேஜ் குழியை திறந்து ஊறுகாய்ப்புல்லை எடுக்க ஆரம்பித்துவிட்டால், தொடர்ந்து அவை எடுக்கப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படவேண்டும.;

•ஊறுகாய்ப்புல் நல்ல நறுமணத்துடன் - பழ வாசனையுடன் இருக்க வேண்டும். 

•அமிலத் தன்மை 4.2 முதல் 4.8 வரை இருக்க வேண்டும்.

•அமோனியாஅளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்கானகுழிகள் அமைத்தல்

ஊறுகாய்ப்புல் தயாரிக்க தரைமட்டக்குழிகள் அமைத்து பதப்படுத்தும் முறை சிறந்தாகும். நீளம் 15 அடி, அகலம் 12 அடி, ஆழம் 6 அடி என்ற அளவுள்ள தரைமட்டக்குழிகளில் 50டன் வரை பசுந்தீவனத்தை பதப்படுத்த இயலும். அந்த வகையில் ஒரு டன் பசுந்தீவனத்தை ஊறுகாய் புல்லாகபதப்படுத்த 28-30 கனஅடி இடம் தேவைப்படும். மழைகாலங்களில் குழிகளில் நீர் கசிவைத்தடுக்க, பண்ணையின் மேட்டுப்பாங்கான இடத்தில் குழிகள் அமைக்கப்படவேண்டும். குழிகளின் உட்புறசுவர்கள் சிமெண்ட் கொண்டு பூசப்படுவதன் மூலம் உட்புறநீர்கசிவைத்தடுக்கலாம். குழிகளின் ஆழம் 6 அடிக்குமிகாமல் இருப்பதன் மூலம்  இலகுவாக தீவனத்தை குழிகளில் இறக்கி அடுக்க ஏதுவாக இருக்கும்.

ஆ. படப்புபோர் அமைத்தல் :

தீவனப்பயிர்களை குறிப்பாக தீவனச்சோளம், கடலைக்கொடி, துவரஞ்செடி போன்றவற்றை கோடைகாலத் தீவனமாக பயன்படுத்த அறுவடைக் காலத்தில் படப்பு அல்லது போர் அமைத்து சேமிக்கலாம்.

ஏற்றதீவனப்பயிர்கள்:

பூக்கும் தறுவாயில் அறுவடைசெய்ததீவனசோளம,; கடலை அல்லது பருப்பு எடுத்தபின் மீந்துள்ள கடலை, துவரை மற்றும் உளுந்தஞ் செடி அல்லது கொடிகள்
செய்முறை:

1. பூக்கும் தறுவாயில் அறுவடை செய்த தீவனசோளம,; கடலை அல்லது பருப்பு எடுத்தபின் மீந்துள்ள கடலை, துவரை மற்றும் உளுந்தஞ் செடி அல்லது கொடிகளை உடனடியாக வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும்.

2. நன்கு உலரவைக் கட்டுக்கட்டாகக் கட்டி சரியாக குவித்தல் வேண்டும். உலர் எடை 85 முதல் 95 சதவீதம் இருத்தல் நல்லது.

3. பின்பு, மேடுநிறைந்த மறைவான இடத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக உயரமாக அடுக்கி வைக்க வேண்டும்.

4. ஒவ்வொரு அடுக்கு இடையிலும் யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலை தெளிக்கலாம். 100 கிலோதீவனத்துக்கு 2 முதல் 4 சதவீதம் இந்த உப்புக்கரைசலை தெளிக்கலாம்.

யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலைத் தெளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

1. யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலை தெளிப்பதால் நைட்ரஜன் சத்து மிகுந்த தீவனம் கிடைக்கிறது. மேலும் செரிமான ஊட்டசத்துக்கள் அளவும் திறனும் அதிகரிக்கிறது.

2. எல்லாக் காலங்களிலும் சத்துமிக்கஉலர்தீவனம் கிடைக்கிறது.

முடிவுரை: 

நமதுநாட்டில் சிலஅரசுப் பண்ணைகளில் மட்டுமேஊறுகாய்ப்புல் மூலம் பசுந்தீவனப் பயிர்கள் பதப்படுத்தப்பட்டுகால்நடைகளுக்குஅளிக்கப்படுகிறது.ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நேரடியாகவும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் மானியம் வழங்கிஊக்குவிக்கிறது. இம்முறையை பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடித்தால், கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை வருடம் முழுவதும் அளிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம். தொலைபேசி 0427-2410408.

தொகுப்பு: முனைவர் ப.ரவி, முனைவர் து.ஜெயந்தி

மருத்துவர் பி.ஸ்ரீபாலாஜி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்