முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      ஆன்மிகம்
Tiruchendur-1--2025-07-07

திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

இதற்கிடையே, திருச்செந்தூர் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்றும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டு ரூ.300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந் திட்டவளாகப் பணிகள் தொடங்கியது. இதில் பல்வேறு திட்டப்பணிகள் முடிவுற்றதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி(நேற்று) கும்பாபிஷேக விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைந்து நடந்தது.

இதைத்தொடர்ந்து கோவிலின் மேற்கு கோபு ரத்தின் அருகே கடந்த 40 நாட்களுக்கு முன்பு யாக சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. சுமார் 8 ஆயிரம் சதுர அடி யில் பிரம்மாண்ட யாக சாலை பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டது. அங்கு கடந்த 1-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. சுவாமி சண்முகருக்கு ராஜகோபுர வாசல் அருகே 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதர் 5, நடராஜர் 5, பெருமாள் 5 மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு காலை, மாலை என ஒவ்வொரு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

நேற்று முன்தினம் காலை 10-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜை மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் , மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலை சுற்றி வந்த கடத்திற்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷ மிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து ராஜகோ புரத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் கடம் கோவிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து காலை 6.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டவும் 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் மூலவர், சண்முகம், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் உள்பட பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது. அப்போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், கோவில் தக்கார் அருள் முருகன், சிருங்கேரி சாரதா பீடாதிபதி விதுசேகர பாரதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாவடு துறை ஆதீன குரு மகா சன்னிதானம், தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், ஜப்பான் நாட்டை சேர்ந்த பாலகும்பா குருமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் இருந்த கடற்கரை பகுதியில் 20 ராட்சத டிரோன்கள் மூலம் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு டிரோன் மூலம் 3முறை பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேக விழா வில் லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்குளிர பார்த்து மகிழ்ந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து