முக்கிய செய்திகள்

தென்னை மரங்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பங்கள்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      வேளாண் பூமி
Coconut

Source: provided

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியின் பிடியில் இருந்து தென்னை மரங்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பங்கள் உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் பெய்த குறைவான மழையினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் கோடைப்பருவத்தில் தென்னை மரங்களைக் காப்பாற்ற, விவசாயிகள் சில எளிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்கவேண்டும்.

பானைவழிப்பாசனம் : சிறியமரங்களையும், கன்றுகளையும் காப்பாற்ற கன்றிலிருந்து இரண்டடி தூரத்தில் குழி எடுத்து, அக்குழியில் அடிப்பாகத்தில் 3 இடங்களில் துளையிடப்பட்ட பானையை வைத்துவிட வேண்டும். பானையில் 3 துளைகளிலும் மெல்லிய துணியில் அடைக்கபட்டு துணியின் ஒரு பகுதி வெளியே தெரியுமாறு தொங்கவிட வேண்டும். பானையில் நீர் நிரப்பினால் பானையின் துளைகளில் உள்ள துணி வழியே நீர் கசிந்து கன்றுகளுக்கு தொடர்ந்து நீர் அளித்து கன்றுகள் வறட்சியினால் காய்ந்து போகாமல் காப்பாற்றும். ஒருமுறை பானையில் நிரப்பும் நீர் 10-15 தினங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

சொட்டுநீர்; பாசனம் : பெரிய தென்னை மரங்களைக் காப்பாற்ற நுண்ணீர் பாசன அமைப்பான சொட்டு நீர்ப்பாசன முறையே சிறந்தது. கிடைக்கும் குறைந்த அளவு நீரைக்கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் பாசனம் செய்து கூடுதல் பரப்பிலுள்ள தென்னை மரங்களைக் காப்பாற்றலாம். சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க 75மூமுதல் 100மூ வரை மானியம் வழங்கப்படுகிறது.

உரிமட்டைகள் பதித்தல் : தென்னந்தோப்புகளில் நிலத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்து மரங்களுக்கு அளிக்கவும், நிலத்திலுள்ள ஈரப்பதம் கடும் வெப்பத்தில் ஆவியாகி வீணாவதை தடுக்கவும் இத்தொழில்நுட்பம் துணைபுரிகிறது. தென்னை மரங்களைச் சுற்றிலும் ஒரு அடி ஆழத்தில் வட்டமாக குழி எடுத்து,குழியினுள் தேங்காய் எடுக்கபட்ட பின்பு வீணாகும் உரிமட்டைகளைப் புதைத்து பின்பு அவற்றை மணலால் மூடிவிட வேண்டும். நாளடைவில் உரிமட்டைகள் மக்கி மண் வளத்தை மேம்படுத்துவதுடன் மண்ணின் நீர் சேமிப்புத் திறனையும் அதிகப்படுத்துகிறது. மணல் சாரியானதோப்புக்கு  இத்தொழில்நுட்பம்  மிகவும் ஏற்றதாகும்.

மூடாக்கு அமைத்தல் : தென்னந்தோப்புகளில் மண்ணின் ஈரப்பதத்தினைக் காப்பாற்ற நிலப்போர்வை என்னும் மூடாக்கு அமைப்பது நல்லது. தென்னை மரங்களின் காய்ந்து கீழே விழுந்த மட்டைகள், அறுவடைக்குப் பின் பயிர்;களிலிருந்து கிடைக்கும் தாவரக்கழிவுகளைக் கொண்டு நில மூடாக்கு அமைத்து மண்ணின் ஈரப்பதத்தை கடும் வெப்பத்தால் ஆவியாகி விடாமல் காப்பாற்றுவதன் மூலம் தென்னை மரங்களைவறட்சியிலிருந்து காப்பாற்றலாம்.

 மட்டைக்கழித்தல் : தென்னை மரங்களில் உள்ள காய்ந்து போன தேவையற்ற மட்டைகளை வெட்டிவிடுவதன் மூலம் மரங்கள் தேவைக்கு அதிகமான நீரை மண்ணிலிருந்து உறிஞ்சி இலைகளின் வழியே வெளியிடும் நீராவிப் போக்கால் ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதன் மூலமும் தென்னை மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம்.

பொதுவாக எதிர்வரும் கோடைப் பருவத்தில் தென்னை மரங்களுக்குப் போதுமான சரியான அளவு தண்ணீரைப் பாசனம் செய்து மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்றவேண்டும். சராசரியாக ஒரு நன்கு காய்க்கும் தென்னை மரத்திற்கு ஒரு நாளுக்கு  60-80 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். எனவே, தென்னை மரங்களுக்கு தேவைக்கேற்ப பாசனநீர்; அளிப்பதன் மூலம் மரங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து மரங்களைக் காப்பாற்றலாம்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: