முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஓய்வூதியம் அதிகரிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசினார், அப்போது அவர் பேசியதாவது:-

கத்தி முனையை விட பேனா முனை வலுவானது என்றார் பேரறிஞர் அண்ணா, பேனா முனையால் ஏட்டை நிரப்பி நாட்டை திருத்தும் நற்பணியாற்றும் பத்திரிகையாளர்கள் நலம்பெறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் பத்திரிகையாளர் ஓய்வூதியத்தினை ரூ.5000-லிருந்து ரூ.8000-ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2500-லிருந்து ரூ.4750- ஆகவும் 3 முறை உயர்த்தி நலிவுற்ற பத்திரிகையாளர் நலம் பெற வழிவகுத்தவர் ஜெயலலிதா.

முதல்வர் எடப்பாடி.பழனிசாமி தலைமையில் செயல்படும் இந்த அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத்தினை ரூ.8000-லிருந்து ரூ.10,000- ஆகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.4750-லிருந்து ரூ.5000- ஆகவும்  உயர்த்தி அறிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தையும், குடும்ப ஓய்வூதியத்தையும் உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு துறை சார்பிலும், பத்திரிகையாளர் சார்பிலூம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகையாளர் நலன் கருதி சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.25.00 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய செய்தியாளர் கூடம் 3.8.2011 அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி பிரிவினருக்கு தேவையான இருக்கைவசதி, பிற செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சி வசதி, கணினி, இண்டர்நெட், வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் அவர்களுடைய மின்னணு சாதனங்களுக்கான பாதுகாப்பு பெட்டக வசதி ஆகிய அனைத்து வசதிகளும் செய்தியாளர்கள் நலன் மற்றும் அவர்களது உடமைகளுக்கு பாதுகாப்பு கருதி அம்மாவின் அரசால் செய்து தரப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து