முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      தமிழகம்
Vijay 2024-11-02

Source: provided

சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும் என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் வரும் 4ம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று (நவம்பர் 2) தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தை நடிகர் விஜய்யின் த.வெ.க. புறக்கணித்தது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பிஹார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து, அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.

அப்போது எச்சரித்தது போலவே பிஹாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்? தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?

இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக, பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது. எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது தமிழக வெற்றிக் கழகத்தின் குரல்தான். இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதன்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் தி.மு.க. தூங்கிக்கொண்டிருந்ததா?

மத்திய பா.ஜ.க.வுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது. அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறதா?

இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் கொடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அது ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில் த.வெ.க. எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.

ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய. வட்ட, பகுதி. கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர். மக்கள் நலன். ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக. மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து