முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக போர் விமானங்களை அனுப்பினார் ரஷ்யா அதிபர் புடின்

ஞாயிற்றுக்கிழமை, 3 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ :  அமெரிக்க, தென்கொரிய ராணுவங்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கொரிய தீபகற்பத்தில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்துச் சென்றன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மீது அமெரிக்கா அடுத்ததடுத்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றும் ரஷ்ய தூதரக ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, சர்வதேச தூதரக விதிகளை அமெரிக்கா மீறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் முற்றி வருகிறது.

இதனிடையே வடகொரியா விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அண்மையில் கூறியபோது, வடகொரியாவை மிரட்டி பணிய வைக்க முடியாது. இது தவறான அணுகுமுறை என்று எச்சரித்தார்.

வடகொரியாவின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அப்போது ரஷ்ய விமானப் படையின் அதிநவீன போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறந்துச் சென்றன.

இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை கூறியபோது, சர்வதேச எல்லையில்தான் ரஷ்ய போர்விமானங்கள் பறந்தன. வேறு எந்த நாட்டின் எல்லையிலும் நுழையவில்லை என்று விளக்கமளித்தார்.

ஏற்கெனவே சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தற்போது வடகொரியா விவகாரத்திலும் ரஷ்யா மறைமுகமாக தலையிடக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் ரஷ்ய போர் விமானங்கள் கொரிய தீபகற்ப பகுதியில் வட்டமடித்துள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் ஐ.நா. பொது சபையின் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இதில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து