புதுடெல்லி, பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ரங்கீலா படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து ஏற்கனவே உறுதி செய்தார்.
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கடந்த 27-ம் தேதி கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் நடிகை ஊர்மிளா வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.