முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      தமிழகம்
cm 2019 09 18

வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உயர்தரமிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வு நடத்தினார்.  இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு பார்வையிட்ட கட்டமைப்புகளை பற்றி விவாதித்ததுடன், அது போன்ற உயர்தரமிக்க உள்கட்டமைப்புகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதன்  அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இதன் மூலம், அதிக முதலீடுகளை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஈர்த்து, வேலைவாய்ப்பை பெருக்க அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு திட்டங்களான, சென்னை நிதி தொழில்நுட்ப நகரம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சித் திட்டம், சென்னை ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிட மேலாண்மை திட்டம், சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் போன்ற அரசு நிறுவனங்களின் நிலங்களில் புதிய முதலீடுகளை ஈர்த்தல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனைகளை நவீனப்படுத்தும் திட்டம், சென்னையில் இலகு ரயில் பயணத் திட்டம், வெளி வட்டச்சாலை –தொழில் மேம்பாட்டுத் திட்டம், கடல் அருங்காட்சியகம் அமைத்தல், அறிவியல் நகரத்தில் தொழில்நுட்பம் மூலம் அறிவுசார் காட்சியகம் அமைத்தல், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்தில் தொழில்நுட்பத்தில் பொழுதுபோக்கு காட்சியகம் அமைத்தல், மெடி பார்க் அமைத்தல், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம்,  பொன்னேரி மையத்தில் சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும்  திருப்பூர் மாநகராட்சிகளில் கழிவுநீர் மறுசுழற்சி செய்யும் திட்டங்கள், சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம், சென்னையில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்,  ராமநாதபுரம் மாவட்டம், குதிரைமொழி கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்  ஆகிய திட்டங்களுக்கான செயல் திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

மேலும், இந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கினார். இத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், கூடுதல் வேலைவாய்ப்பும் ஏற்படும். மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கென தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திற்கு 289 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி,  ஜெயக்குமார், எம்.சி. சம்பத், விஜயபாஸ்கர், வெல்லமண்டி என். நடராஜன், எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  அபூர்வ வர்மா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் சபிதா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங்,  தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு,  பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், நிதித்துறை (செலவினங்கள்) முதன்மை செயலாளர் . எம்.ஏ. சித்திக்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கார்த்திக், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து