சரணடைந்தால் மட்டுமே முஷாரப் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      உலகம்
Musharraf 2020 01 19

இஸ்லாமாபாத் : சட்டத்தின் முன் சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். மேலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது 2013-ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்று விட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கி விட்டார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் ஐகோர்ட் பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. முஷாரப் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என்று லாகூர் ஐகோர்ட் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதாகவும், அந்த தீர்ப்பு செல்லுபடியாகும் என்றும் சில சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முஷாரப் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஷாரப் சார்பில் அவரது வழக்கறிஞர் சல்மான் சப்தார் இந்த 90 பக்க மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் முஷாரப் முதலில் சட்டத்தின் முன்பு சரணடைய வேண்டும். அதன் பிறகுதான் அவர் மேல்முறையீடு செய்ய முயல வேண்டும். எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. மேலும் நீதிமன்றம் தெரிவித்துள்ளபடி ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், மேல்முறையீடு செய்யும் உரிமையை அவர் இழந்து விடுவார் என்று சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து