டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம்: 3 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      தமிழகம்
tnpsc 2020 01 24

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரைத் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதத் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு கடந்த 01.09.2019 அன்று குரூப் 4 தேர்வு, பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. 16,29,865 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டு 24,260 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 05.01.2020 அன்று சமூக வலைதளங்களிலும் பிறகு ஊடகங்களிலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகி உள்ளதாக செய்தி வெளிவந்தது.

இதையடுத்து தேர்வாணையம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் 99 தேர்வர்கள், இடைத் தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத் தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக் கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளை குறித்து விட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது. மேலும் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தர வரிசைக்குள் வந்துள்ளனர். இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களை கள ஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கைகளிலும் தேர்வாணைய இணையதளம், தேர்வர்களுக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் போன்ற அனைத்து தளங்களிலும். தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள் என்பன போன்று பல வழிகளில் அறிவுறுத்தியும் இதுபோன்ற தவறுகளில் ஒரு சில தேர்வர்களே ஈடுபட்டிருப்பது தேர்வாணையத்திற்கு வருத்தமளிப்பதாகவும் தேர்வாணையத்தின் மாண்பைக் குலைப்பதாகவும் உள்ளது. எனவே, மேற்படி காரணங்களின் அடிப்படையில் தேர்வாணையம் கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களைத் தெரிவு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களின் அதிகாரிகள் உட்பட 12 பேரிடம் நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து