முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டம் குந்துகால் கிராமத்தில் ரூ. 70 கோடியில் மீன் இறங்குதளம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மீன்வளத்துறையின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், குந்துகால் கிராமத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், மீன்வளத் துறை சார்பில் 27 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களையும் திறந்து வைத்தார். 

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் பயனுறும் வகையில், பாக் நீரிணை பகுதியில் மீன்பிடி படகுகளின் நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடி கலன்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், படகு அணையும் தளம், T-ஜெட்டிகள் மற்றும் கடற்கரைச் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய மீன் இறங்கு தளம் இராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீனவ கிராமத்தில் அமைக்கப்படும் என்று 2017-18ஆம் ஆண்டு மீன்வளத் துறை மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், குந்துகால் கிராமத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த மீன்பிடி இறங்கு தளத்தில் 528 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் தளங்கள், கடலின் மைய பகுதியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கட்டிடம் கட்டப்பட்டு, 400 ஆழ்கடல் சூரைமீன் படகுகள், 100 கண்ணாடி நாரிழை படகுகள் பாதுகாப்பாக நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 6050 மீனவர்கள் பயன்பெறுவார்கள்.  

சென்னை மாவட்டம், காசிமேடு  மீன்பிடி துறைமுகத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன்விற்பனை கூடம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அண்ணாமலைச்சேரி கிராமத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளம், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகரில் 3 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட தேசிய மீன் பண்ணை மற்றும் பவானிசாகரில் உள்ள புங்கார் மீன் பண்ணையில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தூய மரபின சினை மீன்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மையம், சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள மீன் பண்ணையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தூய மரபின சினை மீன்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மையம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் - லால்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டம் - அகரம் கிராமத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்ட அரசு மீன் பண்ணை, நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர், 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இனவழிக் கால்நடை மூலிகை பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரிய பிராணிகளுக்கான உள்ளிருப்புப் பிரிவுக் கட்டிடம் மற்றும் கால்நடைப் பராமரிப்பாளர் அறை,  திருநெல்வேலி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரிய பிராணிகளுக்கான உள்ளிருப்புப் பிரிவுக் கட்டிடம் மற்றும் கால்நடைப் பராமரிப்பாளர் அறை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டிடம் என மொத்தம் 102 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கான கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் சமீரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர்  பாலச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து