ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      விளையாட்டு
Jones 2020 09 24

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59) மும்பை தனியார் ஓட்டலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். 

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59). இவர் இந்தியாவில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,631 ரன்கள் குவித்தவர் டீன் ஜோன்ஸ். டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களை விளாசியவர் டீன் ஜோன்ஸ். 164 ஒரு நாள் போட்டிகளில் 6,068 ரன்கள் குவித்துள்ள டீன் ஜோன்ஸ் நேர்முக வர்ணனையாளராகவும் பிரகாசித்தவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் விமர்சகராக இருந்து வந்தார். 

ஐ.பி.எல். போட்டிகள் கடந்த 19-ம் தேதி தொடங்கிய நிலையில், இதற்கான பணிகளுக்காக அவர் மும்பையில் இருந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான டீன் ஜோன்ஸின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீன் ஜோன்ஸின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து