சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் ஏதும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      உலகம்
Russia 2020 09 25

Source: provided

மாஸ்கோ : கொரோனாவுக்கு எதிரான சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என்று சோதித்துப் பார்த்த ரஷ்யா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கி கதி கலங்க வைத்து வருகிற சீனாவில், கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து ‘ஆட்5-என்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.  

இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஷ்ய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் நடத்துகிறது.  இந்த ஊசி மருந்து ரஷ்ய மக்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது. 

இதுபற்றி பெட்ரோவேக்ஸ் மருந்து நிறுவனம் கூறுகையில், தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்கள் நன்றாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்கிறவர்கள் எங்களது நேரடி பார்வையில் ஒரு மாத காலம் வைத்திருக்கப்படுவார்கள்.

4 இடைக்கால பரிசோதனைகள் நடைபெறும். 6 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டது. மேலும் இந்த தடுப்பூசி தொடர்பான ஆரம்ப முடிவுகள் நவம்பர் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியது. 

சீனாவின் இந்த தடுப்பூசியை ரஷ்யா முறைப்படி பதிவு செய்தவுடன், இந்த ஆண்டு மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் டோஸ் தடுப்பூசியை தயாரிக்க முடியும். அடுத்த ஆண்டில் மாதம் ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்க இயலும் என்றும் பெட்ரோவேக்ஸ் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து