மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் துவக்கம்: அனைத்து துறைகளிலும் விருதுகளை குவித்து முத்திரை பதித்துள்ளோம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11 96

Source: provided

மதுரை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் துவங்கப்படவுள்ளது. அனைத்து துறைகளிலும் விருதுகளை குவித்து முத்திரை பதித்துள்ளோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

சுமார் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அடுத்த சந்ததியினருக்கு குடிநீர் பிரச்சினை வரக்கூடாது என்ற அளவிற்கு தொலைநோக்குப் பார்வையோடு இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம்.  இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, ஏற்கனவே பல கூட்டுக் குடிநீர் திட்டங்களை நான் திறந்து வைத்திருக்கின்றேன். அம்மாவின் அரசைப் பொறுத்தவரை, குடிநீர் பிரச்சனை இருக்கக் கூடாது என்பதைப்  பிரதான கொள்கையாகக் கொண்டு எங்கு குடிநீர் பிரச்சனை இருந்தாலும், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, கிராமப்புற மக்களுக்கும் குழாயின் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ரூபாய் 3,600 கோடி மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து இந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொடுக்கின்றோம்.  ஆகவே, எங்கள் அரசைப் பொறுத்தவரை, இரவு, பகல் பாராமல் எங்களுடைய அமைச்சர் பெருமக்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செயலாக்கத்திற்குக் காரணம்  துணை முதல்வர்.  ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கி, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறார்  துணை முதல்வர் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். 

அதேபோல, உள்ளாட்சித் துறை அமைச்சர், அம்மாவின் அரசு அறிவித்த திட்டங்களை செவ்வனே செயல்படுத்தியதன் காரணத்தால், அதிகமான விருதுகளை உள்ளாட்சித் துறையின் மூலமாக நாங்கள் பெற்றிருக்கின்றோம்.  தேசிய அளவில் அதிக விருதுகளை குவித்த துறை உள்ளாட்சித் துறை. இதுபோன்று, எல்லாத் துறைகளிலும் தேசிய விருதுகளை குவித்த அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய்த் துறை என்று அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கின்றோம். 

கூட்டுறவுத் துறையை எடுத்துக் கொண்டால், ஏழை, எளிய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வேளாண் பெருமக்களுக்கு கடனுதவி வழங்கும் அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. உரிய காலத்தில் கடனுதவி வழங்குகின்ற காரணத்தால், என்றைக்கும் இல்லாத அளவிற்கு தற்பொழுது டெல்டா பகுதியில் அதிக விளைச்சலை கண்டிருக்கின்றோம்.   அதேபோல, வருவாய்த் துறையில் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசாக அம்மாவின் அரசு இருந்து கொண்டிருக்கிறது.  அம்மாவின் ஆட்சிக்காலத்தில்தான், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்கள்  கொண்டு வந்திருக்கின்றோம். விரைவாக அந்தத் திட்டம் துவங்கவிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, Super Specialty மருத்துவமனையையும் மதுரையில்  உருவாக்கித் தந்திருக்கின்றோம்.    

 

அதேபோல, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வரலாற்றுச் சிறப்புமிக்க 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றோம். சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் நிலை பற்றி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கிராமப்புறத்தில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்று தெரிவித்தார்கள். அப்படி அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற 41 சதவிகிதம் மாணவர்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலமாக 6 மாணவர்களுக்குத் தான்  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. 

ஆனால், இந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 3 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 13 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 10 ஆதிதிராவிட மாணவர்கள், என 26 மாணவர்களுக்கு  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவை நனவாக்கிய அரசு எங்களுடைய அரசு.  சிறப்பான சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றோம், ஏராளமான தடுப்பணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றோம், நீண்ட காலமாக தூர்வாரப்படாத ஏரிகளெல்லாம் விவசாயப் பிரதிநிதிகளை கொண்டு தூர்வாரி, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் சேமித்து வைக்கக்கூடிய ஒரு திட்டத்தை எங்களுடைய அரசுதான் உருவாக்கித் தந்திருக்கின்றது. இப்படி பலவேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். மக்களை நேரடியாக சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் எவ்வாறு நிலைமை இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டி, மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசாக எங்களுடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.  எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர்  கண்ட கனவை அம்மாவின் அரசு நனவாக்கிக் கொண்டிருக்கின்றது.  மதுரை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, மதுரை புறநகர் பகுதிகளுக்கும் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கிய அரசு அம்மாவின் அரசு. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து