என்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      விளையாட்டு
Rohit-Sharma 2021 01 08

Source: provided

பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியா 369 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 

அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷுப்மான் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அனைவரது பந்தையம் சிரமமின்றி அற்புதமாக விளையாடினார். இதனால் ரோகித் சர்மா பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்படும் ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் இந்த ஷாட் செலக்சன் அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. 

ரோகித் சர்மாவை இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். ரசிகர்கள் ரோகித் சர்மாவை வசைபாடி வருகின்றனர். 

இந்த நிலையில் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அந்த ஷாட்டுக்காக வருத்தமடையமாட்டேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஆட்டமிழந்த பந்தை எந்த இடத்தில் சந்திக்க விரும்பினேனோ, அந்த இடத்தில் சந்தித்தேன். ஆனால் பந்தை நான் ஹிட் செய்ய விரும்பியதுபோல் சரியாக பேட்டில் படவில்லை. லாங்-ஆன் - டீப் ஸ்கொயர் லெக் பீல்டர்களுக்கு இடையில் அடிக்க நினைத்தேன். பந்து அதற்கு ஏற்றவாறு பேட்டில் படவில்லை. 

நான் செய்ததை செய்ய விரும்பினேன். இங்கு வருவதற்கு முன், இது பேட்டிங் செய்ய சிறந்த ஆடுகளம் என்பது எங்களுக்குத் தெரியும். பவுன்ஸ், கேரி ஆகும். அதை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன். 

நான் களத்தில் இறங்கி சில ஓவர்கள் விளையாடிய பின்னர், ஆடுகளத்தில் ஸ்விங் இல்லை என்பதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றபடி சற்று மாறிக்கொண்டேன். நான் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதுகுறித்து வருத்தம் அடையமாட்டேன். 

களம் இறங்கி பந்து வீச்சாளரை துவம்சம் செய்து அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பது எனது பணி. இரண்டு அணிகளிலும் ரன்குவிப்பதில் கடினம் உள்ளது. இதனால் யாராவது ஒருவர் முன்வந்து பந்து வீச்சாளர்களுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது என்பது பற்றி யோசிப்பது அவசியம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து