திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் என்னை யாரும் மதிப்பதில்லை என நடிகை ரோஜா எம்.எல்.ஏ. கண்ணீர் புகார் அளித்துள்ளார்.
திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, உரிமை குழு தலைவரிடம் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில தொழிற்சாலை துறை உட்கட்டமைப்பு கழக தலைவருமான நடிகை ரோஜா பரபரப்பு புகார் தெரிவித்தார். அவர் அதிகாரியிடம் கூறுகையில்,
என்னை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். எனது பதவிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் சென்றாலும் தேவஸ்தான அதிகாரிகள் உரிய மரியாதை அளிப்பது இல்லை. என்னை யாரும் மதிப்பதில்லை என கண்கலங்க முறையிட்டார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ரோஜாவின் முறையீடு பற்றி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என உரிமை குழு தலைவர் தெரிவித்தார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, இதற்கு முன்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தனது சொந்த கட்சியினர் தன்னை மதிப்பதில்லை என கட்சி மேலிடத்திற்கு புகார் தெரிவித்திருந்தார். தற்போது தேவஸ்தான அதிகாரிகளும் மதிப்பதில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.