சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், எந்தவித அறிகுறியும் இல்லாமல் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். காமராஜூக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. சிடி ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது. சாதாரணமாக ஒரு அறையில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே காமராஜுக்கு போதுமானதாக இருக்கிறது.
வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் அமைச்சர் காமராஜூக்கு தேவைப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும், தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் காமராஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜை மாற்ற திட்டமிப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.