முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஆர்.எம். மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கோவேக்சின் தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனை இன்று துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கோவேக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இன்று தொடங்குகிறது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து காத்துக் கொள்ள இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. 

இதில் கோவேக்சின் தடுப்பூசி ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உள்ளது.  கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிகம் பேர் முன் வருவதால் இந்த தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியை ஆரம்பத்தில் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம் உள்பட 12 ஆராய்ச்சி மையங்களில் பரிசோதித்து பார்த்தனர். இதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது நாடு முழுவதும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு தற்போது 2 கட்டமாக அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.  இதில் 3-வது கட்டமாக கோவேக்சின் பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்க பாரத் பயோடெக் நிறுவனம் மீண்டும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. இதற்காக ஏற்கனவே தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்திக் கொண்ட 190 பேர்களை வரவழைத்து மீண்டும் 3-வது கட்டமாக கோவேக்சின் டோஸ் தடுப்பூசி போட்டு பரிசோதிக்க உள்ளனர். 

இதற்காக சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 8 மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் இதற்கான பரிசோதனை இன்று தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆராய்ச்சி மையத்திலும் 3-வது கட்ட பூஸ்டர் கோவேக்சின் டோஸ் மருந்து ஒவ்வொரு மையத்திலும் 20 பேர்களுக்கு போடப்பட உள்ளது.  இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்துள்ளது. 

20 பேர்களுக்கும் உடல் தகுதி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு அவர்களை பற்றிய விவரங்கள் ஐ.சி.எம்.ஆர். மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

3-வது கட்ட மருந்து செலுத்தும் போது அவர்களது உடலில் கொரோனா நோய் எதிர்பு சக்தி எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை 6 மாதமாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.  6 மாதம் கழித்து அவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.  

இதுகுறித்து ஆராய்ச்சி டாக்டர் சத்யஜித் முகேபத்ரா கூறும்போது, கோவேக்சின் 3-வது கட்ட தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் அளவுக்கு இந்த 3-வது கட்ட தடுப்பூசி அமையுமா? என்பதை பரிசோதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  இதன் முடிவு தெரிய இன்னும் 6 மாத காலம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து