முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு குற்றச்சாட்டு: கொரோனா 2-ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம்: விதிகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும்

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா 2-ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். 

கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அ.தி.மு.க. வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

2 அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாது. கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார். 

வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா 2-ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். 

அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா பரவலுக்கு காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் அதை காதில் வாங்கவில்லை. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. 

வாக்கு பதிவு நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். 

வாக்கு எண்ணிக்கையின்போது கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்பு தரப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து