குடும்ப அரசியலை ஊக்கப்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளனர் : மத்திய அமைச்சர் கடும் தாக்கு

Mukhtar-Abbas 2021 08 21

Source: provided

புதுடெல்லி : குடும்ப அரசியலை ஊக்கப்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி சாடியுள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட தொடங்கி உள்ளன. குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த ஒற்றுமையை காண முடிந்தது.

பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒரே குரலாய் ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால் பாராளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு, கூட்டத்தொடரும் முன்கூட்டியே முடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தொடரின் போதே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டங்களை மேற்கொண்டிருந்தார்.

இதற்காக நேற்று முன்தினம் அவர் எதிர்க்கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். மெய்நிகர் முறையில் நடந்த இந்த கூட்டத்தில், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இந்த நிலையில், தங்களின் குடும்ப அரசியலை ஊக்கப்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விமர்சித்துள்ளார். முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், 

குடும்ப அரசியலை ஊக்கப்படுத்தவே  எதிர்க்கட்சிகள் கூடியுள்ளனர். இது குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் திட்டம். இதன், நிகழ்ச்சி நிரல் என்னவெனில் ஒரு குடும்பம் மற்றும் அதன் நலனுக்கானது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து