உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து

Jayakumar 2021 08 02

Source: provided

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி என பா.ம.க. எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. இதனால், அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில்,  தனித்துப்போட்டி என பா.ம.க. எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்துப்போட்டி என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவாகும். தனித்து போட்டி என பா.ம.க. எடுத்த முடிவால் அவர்களுக்கு தான் இழப்பு. அ.தி.மு.க.வுக்கு எந்த இழப்பும் கிடையாது. அ.தி.மு.க.-வை பா.ம.க. விமர்சனம் செய்வது என்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.  அ.தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து