முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். 

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. மாவட்டங்கள் மறுசீரமைப்பு காரணமாக அப்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.  

இந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். இந்த 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. 

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்கள் வைப்புத்தொகையாக இதில் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்களை அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். 

வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 22-ம் தேதி ஆகும். 23-ம் தேதி வேட்பு மனு ஆய்வு நடைபெறுகிறது. 25-ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறலாம். முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதியும் நடக்கிறது. 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் 16-ம் தேதி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 20-ம் தேதி பதவி ஏற்கிறார்கள். 22-ம் தேதி மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் ஆகும். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளிலும் தேர்தல் நடை பெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் அய்யப்பன் தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

செங்கப்பட்டு மாவட்டத்தில் பரங்கிமலை, திருக்கழுகுன்றம், திருப்போரூர், லத்தூர், காட்டாங்கொளத்தூர், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடக்கிறது.  பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திரிசூலம், முடிச்சூர், வேங்கை வாசல், பொழிச்சலூர், கவுல் பஜார், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. இந்த பகுதிகளில் முதல்நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 19 யூனியன் அலுவலகங்களிலும் தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் 214 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 232 இடங்களிலும் நேற்று  மனுத்தாக்கல் நடந்தது. நேற்று வேட்பு மனு தாக்கலின் முதல் நாள் என்பதால், விறுவிறுப்பு காணப்படவில்லை. சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர்.  இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமங்களில் பதவிகளை கைப்பற்ற அதிக போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக கிராம பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் நேற்று யூனியன் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுக்களை வாங்கி சென்றனர். இதன்காரணமாக அனைத்து யூனியன் அலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து