முக்கிய செய்திகள்

நரிக்குறவர், இருளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை ஜோதிகா நன்றி

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      சினிமா
Jyotika 2021 11 05

Source: provided

சென்னை : நரிக்குறவர், இருளர்களுக்கு உதவி செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகை ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்து வரும் நரிக்குறவர், இருளர் மக்கள் நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்க கோரிக்க விடுத்து வந்தனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.

இந்நிலையில்,  நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்ற நீங்கள் முடிந்தவரை சிறப்பாக உழைத்து வருகிறீர்கள். அதனை உடனடியாக செய்தும் வருகிறீர்கள். இது தலைமைப் பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்பதைக் காட்டுகிறது.

கல்வித்துறையில் நீங்கள் கொண்டுவரும் நேர்மறையான மாற்றம், ஒரு குடிமகளாக எனக்கும் சரி, அகரம் அமைப்பிற்கும் சரி கடந்த 16 வருடங்களில் பார்க்காதது. குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு நீங்கள் வழங்கிய பட்டா, சாதி சான்றிதழ், மற்றும் அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை நம் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது.

முதலும் முடிவுமாக நாம் இந்தியர்கள் என்ற அம்பேத்கரின் வார்த்தையை நிஜமாக்கியதற்கு நன்றி. உங்களுக்கு ஒரு குடிமகளாக மட்டும் அல்ல, தியா மற்றும் தேவ்வின் அம்மாவாக எனது மரியாதையும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து