முக்கிய செய்திகள்

பார்லி. குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற புதிய சட்ட மசோதா அறிமுகம் : மத்திய அரசு திட்டம்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      இந்தியா
Central-Government 2021 11

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான புதிய சட்ட மசோதா அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 25 புதிய சட்ட மசோதாக்கலையும் அறிமுகப்படுத்துகிறது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான புதிய சட்ட மசோதா உள்பட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்காக, வங்கி சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.  இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு, வங்கி நிறுவனங்களின் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டங்கள் 1970 மற்றும் 1980ல் திருத்தம் செய்வதுடன், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949ல் தற்செயலான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா  சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர, குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (திருத்தம்) மசோதா-2021 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து