முக்கிய செய்திகள்

அதிகாரபூர்வமாக இன்று வெளியீடு? - 8 ஐ.பி.எல் அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      விளையாட்டு
IPL-2021-11-30

Source: provided

மும்பை : அதிகாரபூர்வமாக இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஐ.பி.எல் 2022 போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதிய அணிகள்...

ஐ.பி.எல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னோ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. அகமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

3 வீரர்களுக்கு...

ஐ.பி.எல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான பணிகளில் அணிகள் இறங்கியுள்ளன. பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

ஆர்.டி.எம் நீக்கம்...

பழைய 8 அணிகள் தக்கவைக்கும் 4 வீரர்களில் மூவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். அல்லது தலா இரு வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். கடந்த மெகா ஏலத்தில் ஆர்டிஎம் என்கிற முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தன் அணியில் இருந்த வீரரை ஏலத்தில் இன்னொரு அணி தேர்வு செய்தால் அதே தொகைக்கு ஆர்டிஎம் முறையில் ஓர் அணி தேர்வு செய்துகொள்ளலாம். இப்போது, ஆர்டிஎம் நடைமுறையை நீக்கியுள்ளது ஐ.பி.எல் நிர்வாகம். 

நேற்று கடைசி...

இரு புதிய அணிகள் தேர்வு செய்யும் மூன்று வீரர்களில் இருவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். 8 அணிகளும் நவம்பர் இறுதிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பி.சி.சி.ஐ கூறியுள்ளது. 8 அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியான பிறகு மீதமுள்ள வீரர்களில் இருந்து இரு புதிய அணிகளும் தலா மூன்று வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்தப் பணி டிசம்பர் 25-க்குள் முடிவடையவேண்டும். 

டோனி - ஜடேஜா...

இந்நிலையில் ஐ.பி.எல் 2022 போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரைத் தக்கவைத்துள்ளதாகத் தெரிகிறது. இதர அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

வீரர்கள் விவரம்...

சி.எஸ்.கே: டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி

மும்பை: ரோஹித் சர்மா, பும்ரா

கொல்கத்தா: சுநீல் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்

ஆர்சிபி: விராட் கோலி, மேக்ஸ்வெல்

தில்லி: ரிஷப் பந்த், பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல், நோர்கியா

சன்ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்

இன்று வெளியீடு...

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் வேறொரு அணிக்குத் தலைமை தாங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்தமுறை எந்தவொரு வீரரையும் பஞ்சாப் அணி தக்கவைக்க விரும்பவில்லை என்றொரு தகவல் வெளியாகியுள்ளது.  ஐ.பி.எல் அணிகள் தங்களுடைய பட்டியலை பிசிசிஐயிடம் அளிக்க நேற்று கடைசித் தேதி. இதையடுத்து, 2022 ஐ.பி.எல் போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து