முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா - நியூசி. அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: இந்தியா - நியூசி. அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் மிகுந்த எதிர்ப்பார்பு ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் டிரா...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டி-20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (3-ம் தேதி) தொடங்குகிறது.

கோலி பங்கேற்ப்பு...

முதல் டெஸ்டில் இந்திய அணி நூலிலையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. நியூசிலாந்தின் கடைசி விக்கெட் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பறிபோனது. இதை சரிசெய்யும் வகையில் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. டி-20 தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அணிக்கு பேட்டிங்கில் மேலும் பலம் சேர்க்கும்.

ஸ்ரேயாஸ் ஐய்யர்...

விராட் கோலிக்காக அணியிலிருந்து யார் நீக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐய்யர் கடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்து அவர் முத்திரை பதித்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐய்யர் நீக்கப்பட வாய்ப்பு இல்லை. கடந்த டெஸ்டில் கேப்டனாக பணியாற்றிய ரகானே நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 16 டெஸ்டில் அவரது சராசரி 24.39 ஆகும். இதேபோல தொடக்க வீரர் மயங்க் அகர்வால், புஜாரா ஆகியோரது பேட்டிங்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்த 3 பேரில் ஒருவர் கழற்றிவிடப்படலாம்.

விர்த்திமான் சஹா... 

முதல் டெஸ்டில் காயத்துடன் ஆடிய விர்த்திமான் சஹா முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ஆட முடியாமல் போனால் புதுமுக விக்கெட் கீப்பர் பரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். சுழற்பந்தில் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். மூவரும் சேர்ந்து முதல் டெஸ்டில் 17 விக்கெட் சாய்த்தார்கள். வேகப்பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்தால் முகமது சிராஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

இதுவரை 61 டெஸ்ட்... 

நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டாம் லாதம், வில் யங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதுதவிர கேப்டன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.பந்து வீச்சில் சவுத்தி, ஜேமிசன் முத்திரை பதிக்க கூடியவர்கள். அஜாஸ் படேல் சுழற்பந்தில் சிறப்பாக செயல்படக் கூடியவர். இரு அணிகளும் இதுவரை 61 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 21-ல், நியூசிலாந்து 13-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது.

இன்றைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

BOX-1

இன் 'கோலி' - அவுட் 'ரஹானே' ?

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்டில் கேப்டன் விராட் கோலி அணிக்குத் திரும்புவதால், அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இருந்து யாரை வெளியேற்றுவது என்பது முக்கிய விவாதமாக இருக்கிறது. பயிற்சியாளா் ராகுல் டிராவிட், கேப்டன் கோலி எடுக்க வேண்டியிருக்கும் முக்கிய முடிவு. வெளியேற்றத்துக்கு முதல் தோ்வாக இருந்திருக்க வேண்டிய ஸ்ரேயஸ் ஐயா், கான்பூா் டெஸ்டில் அசத்தலாக சதமும், அரை சதமும் விளாசி தனது சா்வதேச டெஸ்ட் அத்தியாயத்தை அட்டகாசமாகத் தொடங்கியிருக்கிறார். 

மோசமான பேட்டிங் ஃபார்முடன் கான்பூா் டெஸ்டில் கேப்டனானார் அஜிங்க்ய ரஹானே. அணியை சரியாக வழி நடத்தினாலும், பேட்டிங்கில் வழக்கம்போல் சோபிக்காமல் போனார். ஒருவேளை அனுபவ வீரா்களான ரஹானே, புஜாராவுக்கு வாய்ப்பளித்து இளம் வீரா் மயங்க் அகா்வாலுக்கு ஓய்வளிக்க யோசிக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து